பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் பூரண தெளிவில்லாமல் தடுப்பூசி ஏற்றுவது பொருத்தமில்லை - வைத்தியர் சந்திம ஜீவன்தர - News View

Breaking

Wednesday, September 1, 2021

பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் பூரண தெளிவில்லாமல் தடுப்பூசி ஏற்றுவது பொருத்தமில்லை - வைத்தியர் சந்திம ஜீவன்தர

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது நடைமுறை சாத்தியமான தீர்மானம் அல்ல. பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் பூரண அறிவில்லாமல் இவ்வாறான தீர்மானத்துக்கு செல்வது பொருத்தமில்லை என சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீட ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பிரதானி கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று நிலைமையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட பிரிவு அது தொடர்பில் வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது நடைமுறை சாத்தியமான தீர்மானம் அல்ல என்பதே எனது நிலைப்பாடு. தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னர் பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான அறிவு அல்லது அது தொடர்பான புரிதல் இல்லாமல் இவ்வாறான தீர்மானத்துக்கு செல்வது பொருத்தமில்லை.

அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மாணவர்களுக்கு தானாகவே பாதுகாப்பு கிடைக்கப் பெறுகின்றது.

பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே வளர்ச்சி பெறும் முறை தொடர்பாக விரைவில் ஆய்வொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். சுகாதார பிரிவினரிடமிருந்து, அது தொடர்பான தரவுகளை பெற்றுக் கொண்டே மேற்கொள்ள இருக்கின்றோம்.

அத்துடன் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நாட்டில் சீரான நிலைமை ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அனைத்து வைரஸ்களுக்குமான பதில் தடுப்பூசி ஏற்றுவதாகும். அதனால் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முடியுமானவரை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment