இராணுவத்தின் மூலம் பொருளாதாரத்தையும் சந்தை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு நடைமுறைக்கு சாத்தியமான மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா - News View

Breaking

Wednesday, September 1, 2021

இராணுவத்தின் மூலம் பொருளாதாரத்தையும் சந்தை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு நடைமுறைக்கு சாத்தியமான மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

நா.தனுஜா

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிப்பதன் மூலமோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதற்கான அவசர சட்ட விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலமோ பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு பொதுமக்கள் வரிசையில் நிற்பதை நிறுத்திவிட முடியும் என்று அரசாங்கம் கருதுகின்றதா? இராணுவத்தின் மூலம் பொருளாதாரத்தையும் சந்தை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை முதலில் அரசாங்கம் புரிந்து கொண்டு, நடைமுறைக்குச் சாத்தியமான மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சீர்குலைந்திருக்கும் நிலையில் அரச செலவுகளை மட்டுப்படுத்துவதற்கான யோசனைகள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே தற்போதைய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என்பது புலனாகின்றது.

இந்த அரசாங்கத்தின் மாற்று பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக நாடு 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்ததைப் போன்று மீண்டும் பின் நோக்கிச் செல்லப் போகின்றது என்று நாம் ஏற்கனவே கூறினோம்.

ஆனால் உள்நாட்டு உற்பத்தியையும் விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையிலான கொள்கைகளையே அமுல்படுத்த விருப்பதாகவும் அதன் மூலம் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என்றும் ஆளுந்தரப்பினர் கூறினார்கள். ஆனால் இப்போது என்ன நேர்ந்திருக்கின்றது?

கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட குத்தகை மற்றும் கடன் நிதியை மீளச் செலுத்த முடியாமல் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், அதே காலப்பகுதியில் வங்கிகளின் வருமானம் பெருமளவால் உயர்வடைந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் இலங்கை வங்கி உள்ளடங்கலாக வங்கிகளின் வருமானம் வெகுவாக அதிகரித்துள்ளது. அதேபோன்று கொழும்புப் பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகளும் எதிர்பாராத வகையில் சடுதியான உயர்வைக் காண்பிக்கின்றன.

எனவே கொரோனா வைரஸ் பரவலால் தோற்றம் பெற்றிருக்கும் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் மிகச் சொற்பளவான தரப்பினர் மாத்திரம் பெருமளவான இலாபத்தைப் பெறுகின்றனர். மறுபுறம் சாதாரண பொதுமக்கள் தமது அன்றாட வாழ்க்கையை நடாத்துவதிலேயே பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உரிய திட்டமிடலற்ற நிர்வாகத்தின் காரணமாகவே இத்தகைய நிலையேற்பட்டிருக்கின்றது.

தற்போது பரஸ்பர பரிமாற்றல் வசதியின் ஊடாக பங்களாதேஷிடமிருந்து எமது நாட்டிற்கு நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையை விடவும் பங்களாதேஷின் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தது. அவ்வாறிருப்பினும் அந்நாட்டுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின் பொருளாதாரம் தற்போது வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இப்போது அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைப்பதன் மூலமோ அல்லது அரச செலவுகளைக் குறைப்பதன் மூலமோ எவ்வளவு நிதியைச் சேமித்துக் கொள்ள முடியும்? உண்மையில் இங்கு பிரச்சினையாக இருப்பது அரச செலவுகள் அல்ல, மாறாக அரச வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியே நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிப்பதன் மூலமோ அல்லது அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதற்கான அவசர சட்ட விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலமோ பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பொதுமக்கள் வரிசையில் நிற்பதை நிறுத்தி விடமுடியும் என்று அரசாங்கம் கருதுகின்றதா?

இராணுவ அதிகாரிகளின் நியமனத்தின் ஊடாகவோ அல்லது அவசர சட்ட விதிகள் ஊடாகவோ பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. மாறாக இதற்கு சந்தையின் ஊடாக மாத்திரமே தீர்வைக் கண்டடைய முடியும்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் பங்களாதேஷ் மற்றும் சீனாவிடமிருந்தும் பெறும் நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மீளச் செலுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நிதியைப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைப் பெற முடியாது.

எனவே இப்போது மாற்றுவழியொன்றை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இப்போது அரசாங்கம் அதன் வழமையான பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா? அல்லது பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு ஏற்றவாறான மாற்று வழியை நாடுவதா? என்பதில் இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு போதியளவான நிதியில்லை என்றும் அதனால் அரச, தனியார் ஊழியர்கள் தமது ஊதியத்தில் குறித்தளவு சதவீதத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் பரிந்துரைக்கப்பட்டது.

அவ்வாறெனில் தொற்றுப் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கென சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களால் உதவியடிப்படையிலும் அன்பளிப்பாகவும் வழங்கப்பட்ட நிதி எங்கே? அந்த நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் எவை? தற்போதைய பொருளாதார நெருக்கடியை லசந்த அழகிய வன்னவினாலோ பந்துல குணவர்தனவினாலோ சீர்செய்ய முடியாது. அதேபோன்று இராணுவத்தின் மூலம் பொருளாதாரத்தையும் சந்தை நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment