பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளேன் - அஜித் நிவாட் கப்ரால் - News View

Breaking

Sunday, September 12, 2021

பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளேன் - அஜித் நிவாட் கப்ரால்

ஆர்.ராம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளால் ஏற்பட்டுள்ள பாரிய சவால்களுக்கு மத்தியில்தான் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளேன் என்று தற்போது நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவுள்ள அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14ஆம் திகதியுடன் இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் புதிதாக அப்பதவிக்கு நியமிக்கப்படவுள்ள அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் என்னை மீண்டும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர். நான் அவர்கள் என் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையை கருத்திற் கொண்டு எவ்விதமான தயக்கங்களும் இன்றி அப்பதவியை ஏற்றுக் கொள்வதாக கூறினேன்.

இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் வியாழக்கிழமை ஆளுநர் பதிவியைப் பொறுப்பேற்க முடியும் என்று எதிர்பார்க்கின்றேன். அதேநேரம், அப்பதவியில் எனது செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

மேலும் தற்போது பொருளாதார ரீதியாக நாடு பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இவ்விதமானதொரு தருணத்தில்தான் ஆளுநர் பதவியை நான் பொறுப்பேற்கின்றேன். அவ்விதமான சவால்கள் நிறைந்த காலத்தில் இப்பதவியைப் பெற்றுக் கொண்டு மீண்டும் நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வருவதையே இலக்காக கொண்டுள்ளேன்.

குறிப்பாக ஜனாதிபதியின் சுபீட்சத்துக்கான இலக்கு என்ற கொள்கைத் திட்டத்தினை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

No comments:

Post a Comment