சன்ஷயின் சுத்தா சுட்டுக் கொலை : விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வேன் உரிமையாளர் - News View

Breaking

Sunday, September 12, 2021

சன்ஷயின் சுத்தா சுட்டுக் கொலை : விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வேன் உரிமையாளர்

(எம்.மனோசித்ரா)

அமில பிரசங்க ஹெட்டிஹேவா என்ற சன்ஷயின் சுத்தா சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வேன் உரிமையாளரான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டவில பொலிஸ் பிரிவில் 29 வயதுடைய அமில பிரசங்க ஹெட்டிஹேவா என்ற சன்ஷயின் சுத்தா சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வேன் தொடர்பில் மாத்தறை பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதற்கமைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த வேன் உரிமையாளர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு கோட்டவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 33 வயதுடைய வெல்லம்பிட்டி - சேதவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த வேன் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டது என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரான நதுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் உதவியுடன் பெற்றுக் கொள்ளப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

வேன் உரிமையாளரான குறித்த சந்தேகநபர் குற்ற சந்தேகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை மாத்தறை நீதிமனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad