ஆப்கானிஸ்தான் பெண்கள் அணிக்கு தடை விதித்தால் ஆண்கள் அணியுடன் கிரிக்கெட் ரத்து : அவுஸ்திரேலியா - News View

Breaking

Thursday, September 9, 2021

ஆப்கானிஸ்தான் பெண்கள் அணிக்கு தடை விதித்தால் ஆண்கள் அணியுடன் கிரிக்கெட் ரத்து : அவுஸ்திரேலியா

தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி விளையாட அனுமதி இல்லை என்ற செய்தி உண்மையாக இருந்தால், ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணியுடனான தங்கள் போட்டியை ரத்து செய்ய இருப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் அவுஸ்திரேலியா' தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனமான எஸ்.பி.எஸ். நியூசிடம் பேசிய தலிபான் பண்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக், "பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த கருத்தினால் கவலை அடைந்திருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

எல்லா நிலைகளிலும் கிரிக்கெட் விளையாட்டை பெண்கள் விளையாடுவதற்கு நிபந்தனையற்று தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா கருத்துத் தெரிவித்தது.

"பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதி இருக்காது என்ற ஊடக செய்திகள் உண்மையாக இருக்குமானால், ஹோபர்ட் நகரில் நடக்கவுள்ள அவுஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் மேட்சை ரத்து செய்வதைத் தவிர கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு வேறு வழி ஏதுமில்லை," என கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் விளையாடுவதற்கு முடிவு செய்யப்பட்டு, போட்டி 26ஆம் திகதி தொடங்குவதாக உள்ளது. ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி அதன் 12 முழு உறுப்பினர்களும் தேசிய பெண்கள் அணியையும் கொண்டிருக்க வேண்டும். அதைப்போல முழு உறுப்பினர்கள் மட்டுமே சர்வதேச டெஸ்ட் போட்டிகளை விளையாட முடியும்.

No comments:

Post a Comment