(இராஜதுரை ஹஷான்)
அதிபர், ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை இதுவரை வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை மாணவர்கள் தயார் நிலையில் உள்ளார்களா என்பது தொடர்பில் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், கல்வி அமைச்சின் செயலாளருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும்குறிப்பிடுகையில், வரவு, செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கல்வி அமைச்சின் செயலாளர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாத்திரம் குறிப்பிட்டார். இவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஏற்பாடு செய்வதாக மாத்திரம் குறிப்பிட்டார். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. தீர்வு காண்பது வெறும் இழுப்பறி நிலையில் உள்ளது.
இப்பிரச்சினைகளினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினால் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்.
இவ்வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் இதுவரையில் விண்ணப்பிக்கவில்லை. இதற்கான பொறுப்பை எம்மால் ஏற்க முடியாது. அரசாங்கம் தனது பலவீனத்தை மறைத்துக் கொள்ள பிறரை பழி சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது, எனக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment