ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க நினைக்கின்றார் - சுமந்திரன் - News View

Breaking

Monday, September 6, 2021

ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க நினைக்கின்றார் - சுமந்திரன்

(ஆர்.யசி,எம்.ஆ .எம்.வசீம்)

அத்தியாவசிய சேவைகள் எனக்கூறி, ஏதேனுமொரு சேவையை பிரகடனப்படுத்த வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு சட்டமே இருகின்றது. அதன் கீழே பிரகடனப்படுத்தலாம். ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி ஜனாதிபதி இரவோடு இரவாக தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க நினைக்கின்றார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதகான அவசரகால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான விவாதம் இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டை இருட்டுக்குள் வைத்திருக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். நாட்டிலே விலைவாசி கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை. ஆனால் இதனை இப்படியாக செய்வதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

உணவு விநியோகம் மற்றும் விலைவாசி அதிகரிப்பை அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தித்தான் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

ஆனால் நாட்டை அவசரகால நிலைமையின் கீழ் கொண்டுவரும் உண்மையான நோக்கம் இப்படியான ஒரு அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விட்டால், அதன் கீழான அவசரகால சட்ட விதிகளை ஜனாதிபதி இரவோடு இரவாக கொண்டுவர முடியும்.

அதனை இந்த பாராளுமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இந்த பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள கடமை மாதத்திற்கு மாதம் அவசரகால நிலைமை அனுமதிப்பதா? இல்லையா? என்ற கேள்வி மட்டும்தான்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரத்தில் சொல்லப்பட்டுள்ள விதத்திலே ஒரு கபடமான எண்ணம் இருப்பது தெளிவாக எமக்கு தெரிகின்றது.

நாட்டிலே விலைவாசி கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை. ஆனால் இதனை இப்படியாக செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment