(எம்.மனோசித்ரா)
உள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் சந்தைகளில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக திட்டமிட்டவாறு முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், அந்த வகையில் எரிபொருள் கொள்வனவில் நிலவும் தாமதம் காரணமாக ஊரடங்கு மேலும் நீடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அநேகமாக ஒக்டோபர் நடுப்பகுதிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டின் கடன் முகாமைத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் அந்நிய செலாவணி குறைந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் பிராந்தியத்தில் வெளிநாட்டு நாணய மாற்று சேமிப்பு கடந்த ஒரு வருட காலமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் மாத்திரம் கையிருப்பு வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்சி சுற்றுலா பயணத்துறையை மீளக் கட்டியெழுப்புவதிலேயே தங்கியுள்ளது. ஆனால் நாட்டில் நிலவும் நிச்சயமற்ற நிலைமை பாரிய சவாலாக விளங்குவதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment