அரசாங்கத்திடம் போதுமான அளவு டொலர் கையிருப்பில் இல்லை, ராஜபக்ஷர்கள் நாட்டை வீழ்ச்சி நிலைக்கு கொண்டு செல்கிறார்கள் - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Sunday, September 26, 2021

அரசாங்கத்திடம் போதுமான அளவு டொலர் கையிருப்பில் இல்லை, ராஜபக்ஷர்கள் நாட்டை வீழ்ச்சி நிலைக்கு கொண்டு செல்கிறார்கள் - ஹர்ஷ டி சில்வா

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திடம் போதுமான அளவு டொலர் கையிருப்பில் இல்லை. தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க்கை செலவுகளும் நாளாந்தம் உயர்வடைந்த நிலையில் உள்ளது. ராஜபக்ஷர்கள் நாட்டை வீழ்ச்சி நிலைக்கு கொண்டு செல்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுவதாவது, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதிலும், துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை விடுவிப்பதிலும் பாரிய நிதி நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் போதுமான அளவு டொலர் கையிருப்பில் இல்லை என்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

டொலர் நெருக்கடி காரணமாகவே ஊரடங்கு சட்டம் பொருத்தமற்ற வகையில் நீடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய மட்டத்திலான தேவைக்கு கூட எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் வசம் டொலர் கையிருப்பில் இல்லை.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு 500 மில்லியம் டொலர் கடனை அரசாங்கம் இந்தியாவிடம் கோரியுள்ளது. ஆனால் இந்தியா இதுவரையில் இக்கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கவில்லை. மறுபுறம் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ள வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மத்திய கிழக்கு நாடுகள் பக்கம் சுற்றித்திரிகிறார்.

அரசாங்கம் ஆட்சிக்க வந்த காலத்தில் இருந்து தவறான பொருளாதார முகாமைத்துவத்தினை செயற்படுத்தியதால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. பால்மா, கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படும்.

தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் எடுத்த ஒரு சில தீர்மானங்கள் இன்று தேசிய உற்பத்திகளை முழுமையாக பாதித்துள்ளது. இரசாயன உரம் தடை செய்யப்பட்டதனால் பெரும்போகத்திற்கான விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அரிசியின் விலையும் தற்போதைய விலையை காட்டிலும் அதிகரிக்க கூடும்.

ராஜபக்ஷர்கள் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் தெளிவில்லாமல் எடுக்கும் தீர்மானங்களின் விளைவை நாட்டு மக்கள் எதிர்க் கொள்கிறார்கள். 2005 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment