ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவது குறித்தும், ஜனநாயக அடக்குமுறைகளை அரசாங்கம் கையாள்கின்றமை தொடர்பிலும் சர்வதேசம் நன்றாக அறிந்துள்ளதுடன் பாரிய அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் குறித்து ஆராய இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய குழுவும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை வழங்கும் என தாம் எதிர்பார்ப்பதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயும் நோக்கில் ஐவர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று இலங்கை வருகின்றது.
இந்நிலையில் அரசாங்க தரப்பு, எதிர்க்கட்சி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என பல்வேறு தரப்பை இவர்கள் சந்தித்து இலங்கையின் உண்மையான நிலைமைகள் குறித்து ஆராயவுள்ளனர்.
இந்த விஜயத்தின் விளைவுகள், தீர்மானங்கள் குறித்து பிரதான எதிர்க்கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவும், சர்வதேச விவகாரங்களை அதிகம் கண்காணிக்கும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்லவிடம் வினவிய போது அவர் கூறியதானது, இலங்கையின் மனித உரிமைகள் குறித்து சர்வதேச தரப்பிடம் நல்ல நிலைப்பாடொன்று காணப்படவில்லை. எமது ஆட்சிக் காலத்தில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அடுத்து இலங்கைக்கு 2017 ஆம் ஆண்டு எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்பட்டது.
சர்வதேசத்தின் சகல ஒத்துழைப்புகளும் எமக்கு கிடைத்தது, பொறுப்புக்கூறல் விடயங்களில் நாம் ஆரோக்கியமான முன்னகர்வுகளை கையாண்டோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பினூடாக சகல நல்லிணக்க மற்றும் ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்தோம்.
எனினும் ராஜபக்ஷவினரின் சதித்திட்டங்கள் காரணமான மக்கள் ஏமாற்றப்பட்டு மீண்டும் ராஜபக்ஷ ஆட்சி உருவாகிய பின்னர் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மீண்டும் கேள்வி எழுந்துள்ளது.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், ஆணையாளர் மூலமாக முன்வைக்கப்பட்ட வாய்மூல அறிக்கையிலும் நாட்டின் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக அடக்குமுறை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாய்ச்சல் போன்றவைற்றை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே புதிதாக நாம் எதையும் கூற வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக அடக்குமுறை குறித்து பாரிய அதிருப்தியில் சர்வதேச சமூகம் உள்ளது. இப்போது இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய குழுவும் இவற்றையெல்லாம் அறிந்தே வருகின்றனர். ஆகவே அவர்களும் நிச்சயமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதனை தவிர்க்க முடியாது.
ஜி.எஸ்.பி பிளஸ் எமது கையை விட்டு போகும் நிலையில் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நெருக்கடிக்குள் இலங்கை தள்ளப்படும். அதனை நாம் விரும்பவில்லை என்றாலும் கூட அரசாங்கத்தின் மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம். மக்களின் உரிமைகளை பாதுகாக்க நாம் மாற்று அணியில் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளரும், சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவருமான எம்.எ.சுமந்திரன் இது குறித்து கூறுகையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடன் நாம் செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது நாட்டின் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத செயற்பாடுகள் குறித்தும் அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எமது பக்க நியாயங்களை முன்வைப்போம்.
நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது. இந்நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை எமது கையை விட்டு சென்றால் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை தள்ளப்படும்.
இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கு ஐரோப்பிய நாடுகளை சார்ந்து முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இவ்வாறான சலுகைகள் இல்லாது போவது இலங்கையால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையை உருவாக்கும். இது நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கும். அதற்கு நாம் விருப்பம் இல்லாது போனாலும் கூட எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் மூலமாக நீண்ட காலமாக எமது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல் கைதிகள் நீண்ட காலமாக தடுப்புக்காவலில் உள்ளனர். இவர்களின் விடுதலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அடக்குமுறையில் இருந்து நாடு விடுபட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம் என்றார்.
கேசரி
No comments:
Post a Comment