அரசு மீதான மக்களின் எதிர்ப்புகளை கட்டுப்படுத்தவும், ஒடுக்கவுமே அவசரகால சட்டம் கொண்டு வரப்படுகின்றது - ரஞ்சித் மத்தும பண்டார - News View

Breaking

Monday, September 6, 2021

அரசு மீதான மக்களின் எதிர்ப்புகளை கட்டுப்படுத்தவும், ஒடுக்கவுமே அவசரகால சட்டம் கொண்டு வரப்படுகின்றது - ரஞ்சித் மத்தும பண்டார

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசு மீதான மக்களின் எதிர்ப்புகளை கட்டுப்படுத்தவும், ஒடுக்கவுமே அவசரகால சட்டம் கொண்டு வரப்படுகின்றது என்று பிரதான எதிர்க்கட்சி இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் வரலாற்றை பார்க்கும் போது, அவசரகால சட்டமானது கலவரம், யுத்தம் உள்ளிட்ட சந்தர்ப்பங்களிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் முதற்தடவையாக இப்போது பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

நுகர்வோர் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் இருக்கும் போது ஏன் அவசரகால சட்டத்தை கொண்டுவர வேண்டும்? இது நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தவோ, பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தவோ அல்ல, மக்களின் எதிர்ப்புகளை கட்டுப்படுத்தவும், ஒடுக்கவுமே இது கொண்டு வரப்படுகின்றது.

இதேவேளை இதற்கு முன்னர் நுகர்வோர் விவகாரம் தொடர்பாக இருந்த ஆணையாளர்கள் சிவில் சேவையுடன் தொடர்புடையவர்களாகவே இருந்தனர். ஆனால் இப்போது இராணுவத்தை சேர்ந்தவர்களை போடுகின்றனர்.

நுகர்வோர் விடயங்களுடன் தொடர்புடைய பணிகளை சிவில் சேவை அதிகாரிகளே செய்ய வேண்டுமே ஒழிய, சிவில் சேவையுடன் தொடர்பில்லாத இராணுவத்தினருக்கு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment