கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை ரெலோ, புளொட் அறிவிப்பு : எட்டப்பட்ட முடிவுக்கு அமையவே செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை ரெலோ, புளொட் அறிவிப்பு : எட்டப்பட்ட முடிவுக்கு அமையவே செயற்பட்டதாகவும் சுட்டிக்காட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை என்று பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியன கூட்டாக தெரிவித்துள்ளன.

அத்துடன், தமிழ்த் தேசியத் தளத்தில் பயணிக்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்வரும் 48 ஆவது அமர்வில் வாய்மொழி மூலமாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையில் பொறுப்புக் கூறலையும், நீதிக் கோரிக்கையும் வலியுறுத்தி சமகால நிலைமைகளையும் சுட்டிக்காட்டி கடிதம் அனுப்புவதென்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் அக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாம் வெளியேறி விட்டதாக விஷமத்தமான பிரசாரம் செய்யப்படுகின்றது. அது முற்றிலும் தவறானதாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதன் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்றாக ரெலோவும் உள்ளது. அவ்வாறிருக்க, கூட்டமைப்புக்கு தனியொரு கட்சி மட்டும் உரிமை கோர முடியாது.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இணக்கிச் செயற்படக் கூடிய விடயங்கள் அனைத்து தமிழ்த் தேசியத் தரப்புடனும் ஒருங்கிணைந்து செயப்படுவதே எமது நிலைப்பாடாகும்.

அந்த வகையில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பில் அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்தானிகருக்கு அனைத்து தரப்புக்களையும் ஒருங்கிணைத்து கடிதமொன்று அனுப்புவதென்றே ஏகமனதாக இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

அதற்கு அமைவாக வரைவினைத் தயாரிக்கும் பொறுப்பு சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அது குறித்த அடுத்தகட்டச் செயற்பாடுகள் மந்தகதியில் இருந்தன. அதன் காரணமாக, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கட்சிகளின் மத்தியில் ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கான கடிதத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை குறிப்பிட்டு வரைவொன்றை விரைந்து தயாரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அதனை நாம் அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பியிருந்தோம். அவ்விடயங்களை ஏற்றுக் கொண்டவர்கள் கையொப்பமிட்டு அதனை ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கு அனுப்பியிருந்தோம். அதில் கையொப்பமிடுவதும் தவிர்ப்பதும் அந்தந்த தரப்பினரின் ஜனநாயக உரிமையாகும்.

ஆகவே, மக்களின் பொதுப் பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயற்படுவதால் கூட்டமைப்பிலிருந்து நாம் வெளியேறியதாக கொள்ள முடியாது. எதிர்வரும் காலத்திலும் மக்களின் விடயங்களில் இணைந்து செல்லக்கூடிய தரப்புக்களுடன் ரெலோ ஒருங்கிணைந்து பயணிக்கும் என்றார்.

அதேநேரம்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் எம்.பி, இவ்விடயம் குறித்து கூறுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் அனுப்பியதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்து விட்டது என்று கூறுவது வேடிக்கையாகவுள்ளது.

கடந்த மார்ச் மாதக் கூட்டத் தொடரின்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஏனைய கூட்டணிகளின் தலைவர்களான விக்னேஸ்வரன், கஜேந்திகுமார் மற்றும் சில சிவில் அமைப்புக்கள் ஆகியன மட்டுமே கையொப்பமிட்டு உயர்ஸ்தானிகருக்கு கடிதம் அனுப்பியிருந்தன.

அதற்குப் பின்னர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பிறிதொரு கடிதத்தினை அனுப்பியிருந்தோம். தமிழரசுக் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறாக கடிதம் அனுப்பியிருந்தார்கள். அவ்விதமான நிகழ்வுகள் நடைபெற்றபோதும் கூட்டமைப்பு பிளவடையவில்லை.

மேலும், தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் கூட்டிணைந்து நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் உள்ளடக்கங்கள் குறித்து பரிசீலித்தோம். ஏற்கனவே இணங்கிய விடயங்கள் அதில் காணப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் தான் நாம் கையொப்பமிட்டோம் என்றார்.

இதேவேளை,தாம் கையொப்பமிட்ட கடிதம் தமிழரசுக் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் பங்காளிக் கட்சிகள் தலைவர்கள் கூறியிருந்ததோடு, தாம் குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்ட பின்னரே சுமந்திரனினால் வரைவு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளனர்.

வீரகேசரி

No comments:

Post a Comment