தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரிவினை பாராது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது - அமைச்சர் நாமல் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரிவினை பாராது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது - அமைச்சர் நாமல்

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழிற்கு இன்றையதினம் (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ள அவர், அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்டதன் பின்னர், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமானது வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அது பல மில்லியன் ரூபாய் மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

அதுபோல பல்வேறுப்பட்ட குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

எனவே தற்போதைய அரசாங்கமானது வடக்கு, கிழக்கு, தெற்கு என்று பிரிவினையை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது

எனினும் தற்போது எமக்கு கொரோனா வைரஸ் என்ற ஒரு பிரச்சினை காணப்படுகிறது. எனினும் அந்த கொரோனா வைரஸ் என்ற தடையையும் தாண்டி அதனை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தோடு இந்த அபிவிருத்தியினையும் அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

அத்தோடு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததாக தற்போது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதி தலைமையில் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment