சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மேற்கொள்ளவும் - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை - News View

Breaking

Thursday, September 9, 2021

சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மேற்கொள்ளவும் - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

(எம்.மனோசித்ரா)

சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றின் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ள அவர் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும் என்பதையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் நாட்டுக்கு வரும் போது அதற்கு முன்னரான 72 மணித்தியாலங்களில் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும். அதே போன்று 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் விதிமுறையும் நீக்கப்பட வேண்டும்.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விமான நிலையத்தில் அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது கடிதம் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், அவரது கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டால் அது விமானக் குழுவினருக்கும் நாட்டிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment