பேராசிரியர் நீலிகா மலவிகேவிடம் மன்னிப்புக் கோரினார் ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

பேராசிரியர் நீலிகா மலவிகேவிடம் மன்னிப்புக் கோரினார் ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும

(நா.தனுஜா)

அண்மையில் தன்னால் கூறப்படாத கருத்தொன்றை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டிருப்பதன் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருப்பதாக பேராசிரியர் நீலிகா மலவிகே கூறியிருந்த நிலையில், அதற்காக அவரிடம் அனைத்து ஊடகங்களின் சார்பிலும் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும மன்னிப்புக்கோரியிருக்கின்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயெதிர்ப்புப் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே அண்மையில் இணையவழிக் கலந்துரையாடலொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டுமென தான் கூறவில்லை என்றும் 40 நிமிட இணையவழிக் கலந்துரையாடலில் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய வகையில் அதனை செய்தியாக வெளியிடுகின்ற ஊடங்களின் செயற்பாட்டினால் தான் பெரிதும் கவலையும் களைப்பும் அடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு பேராசிரியர் நீலிகா மலவிகே அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

இந்நிலையில் நீலிகா மலவிகேவின் பதிவை மேற்கோள்காட்டி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மிகுந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், இலங்கைப் பிரஜைகளை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகத் தனது அறிவையும் ஆலோசனைகளையும் முழுமையாக வழங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஓர் சமுதாயத் தலைவராக பேராசிரியர் நீலிகா மலவிகேவை குறிப்பிட முடியும்.

அவ்வாறிருக்கையில் தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாகியிருக்கின்ற, கேற்வே சர்வதேச பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த இணையவழிக் கலந்துரையாடலை தனிப்பட்ட ரீதியில் நான் முழுமையாகக் கேட்டேன்.

அதன் காரணமாக நீலிகா மலவிகேவினால் கூறப்பட்ட கருத்தை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டமையினால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பையும் மனவேதனையையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது.

அதனைப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் நாமனைவரும் மனிதாபிமானம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஆகையினால் நேற்று முன்தினம் அவரைத் தொடர்பு கொண்டதுடன் அனைத்து ஊடகவியலாளர்கள் சார்பிலும் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அவரிடம் மன்னிப்புக் கோரினேன்.

எனவே இந்தத் தவறை பொறுப்பு வாய்ந்த ஊடக செயற்பாட்டிற்கான ஆரம்பமாக மாற்றிக் கொள்ளுமாறு அனைத்து சகோதர ஊடகவியலாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment