நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காணவே அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகல் - சாகர காரியவசம் - News View

Breaking

Monday, September 13, 2021

நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காணவே அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகல் - சாகர காரியவசம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வைக் காணவே அஜித் நிவார்ட் கப்ரால் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ளதுடன், மத்திய வங்கியின் ஆளுனராகவும் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான சாகர காரியவசம், தமது பணியை தடையின்றி முன்னெடுப்பதற்காக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் அவருக்கு வழங்குமெனவும் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் ஒருவருக்கு இருப்பதைபோன்ற அதிகாரங்கள் மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்படவுள்ள அஜித் நிவார்ட் கப்ராலுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது மிகவும் தறவான பிரசாரமாகும். மத்திய வங்கியின் ஆளுனருக்கு எவ்வாறு அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் வகையிலான அதிகாரத்தை வழங்க முடியும்.

நாடு தற்போது சாதாரணமான ஒரு சூழ்நிலையில் இல்லை. மிகவும் நெருக்கடியான ஒரு சூழலை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வுகாண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் எடுப்பதற்காக சில சில விடயங்களை அவர் கோரியிருக்கலாம்.

குறிப்பாக அவருக்குத் தேவையான பணியாட்களை கோரியிருக்கலாம். அதற்கான ஒத்துழைப்புகளை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வழங்குவது கடமையாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment