கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்ததும் கடினமான வேலைகளை தவிர்ப்பது அவசியம் - ஓரிரு வாரங்களுக்கு ஓய்வு அவசியம் என்கிறார் மருத்துவர் அரசாத் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Monday, September 13, 2021

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்ததும் கடினமான வேலைகளை தவிர்ப்பது அவசியம் - ஓரிரு வாரங்களுக்கு ஓய்வு அவசியம் என்கிறார் மருத்துவர் அரசாத் அஹமட்

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் சிறிது காலத்துக்கு அவதானத்துடன் இருப்பதே சிறந்தது என்கின்றார் சிறுவர்நல மருத்துவர் பீ.எம். அரசாத் அஹமட்.

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மத்தியில், கொவிட் பாதிப்புக்குப் பிந்திய பல்வேறு நீண்ட தொடர் நோய்கள் (Long COVID Syndrome) ஏற்படுவது பலரில் அவதானிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு ஏற்படக் கூடிய நீண்ட கால அறிகுறிகளாக கீழ்வரும் பல அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றோ அல்லது பலதோ ஏற்படலாம் என்கிறார் மருத்துவர் அரசாத் அஹமட்.

அவ்வாறான அறிகுறிகள் பின்வருமாறு
அதிக சோர்வு, மூச்சுத் திணறல், மார்புவலி அல்லது நெஞ்சிறுக்கம், நினைவு மறதி மற்றும் கவனச்சிதறல்கள், உறங்குவதில் சிரமம் (தூக்கமின்மை), படபடப்பு, தலைச்சுற்றல், ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, மூட்டுவலி, மனஅழுத்தம் மற்றும் பதற்றம், காதுவலி , உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, பசியின்மை, அதிக உடல் வெப்பநிலை, இருமல், தலைவலி, தொண்டைப் புண், வாசனை அல்லது சுவை உணர்வு இல்லாமை, தோல் தடிப்புகள்.

“இவ்வாறான அறிகுறிகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன. இவை சில வேளைகளில், ஒரு சில மாதங்கள் வரை நீடிக்கவும் கூடும். இவற்றில் சடுதியாக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய Myocarditis எனும் இருதய தசை அழற்சி மிகவும் பாரதூரமான ஒன்றாகும். இதுவே கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பலர் சடுதியாக உயிரிழந்து போவதற்கான காரணமாக அமைவதாக ஆய்வுகளில் அறியப்பட்டிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எனவே, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஓரிரு வாரங்கள் வீட்டில் போதுமான அளவு ஓய்வு எடுப்பது கட்டாயம். கொவிட் தொற்றுக்கு பிந்திய ஓரிரு வாரங்களுக்கு அதிக வேலைகள் செய்யாமல், அதிக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது விரும்பத்தக்கது. இது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதை மறக்க வேண்டாம். ஓய்வாக இருப்பது இருதயத்துக்கு அதிக வேலை கொடுப்பதை தவிர்க்க உதவும். ‘மயோகார்டைடிஸ்’ ஏற்பட்டாலும் இருதயத்தை பலவீனம் ஆகி விடமால் பாதுகாக்கும்” என்று மருத்துவர் அரசாத் அஹமட் விளக்கமளித்தார்.

‘எனக்கு கொவிட் வந்து இப்போது குணமடைந்து விட்டது’ அல்லது 'சும்மா காய்ச்சல் வந்து குணமடைந்து விட்டது' , ‘நான் இப்போது நன்றாக இருக்கிறேன்; எனக்கு ஒன்றும் இல்லை’ என்ற எண்ணத்தில் உடனடியாக வழமை போன்று வேலைகளைச் செய்வதை, ஜிம் போவதை, கடின உடல் உழைப்பு மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஓரிரு வாரங்கள் ஓய்வின் பின்னர் இவைகளை மெதுமெதுவாக ஆரம்பிப்பது புத்திசாலித்தனமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இவ்விடயங்களை கருத்திற் கொண்டு, கொவிட்-19 தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் அசிரத்தையுடன் நடந்து கொள்ளாது அவதானத்துடன் நடந்து கொள்வது தமது உயிரை காப்பாற்றுவதுடன், தம்மில் தங்கிவாழ்வோர்க்கும் பாதுகாப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

றிசாத் ஏ காதர்

No comments:

Post a Comment