கொவிட் தொற்றாளர்களுக்காக நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு பேராதனை வைத்தியசாலையில் ஆரம்பித்து வைப்பு : பண மோசடி நடைபெறுவதில் உண்மை உள்ளது என்கிறார் கெஹலிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

கொவிட் தொற்றாளர்களுக்காக நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவு பேராதனை வைத்தியசாலையில் ஆரம்பித்து வைப்பு : பண மோசடி நடைபெறுவதில் உண்மை உள்ளது என்கிறார் கெஹலிய

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், தடுப்பு மருந்தேற்றலில் இலங்கை மிகவும் சிறப்பான இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

கொவிட் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் மருத்துவர்கள், தாதியர்கள், பரிசாரகர்கள் அடங்கலாக மருத்துவப் பணியாளர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். இந்த விடயங்கள் ஊடகங்களில் சரியாக பிரதிபலிப்பது கிடையாது என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில், நேற்று (14) கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய நடமாடும் தீவிர சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்து வைத்தபின் ஊடகவியாளர் மத்தியில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், இந்த புதிய பிரிவின் மூலம் நோயாளர்கள் இருக்கின்ற இடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி கிடைக்கிறது.

இன்று நாட்டின் 800 நிலையங்களில் தடுப்பு மருந்தேற்றல் திட்டம் அமுலாகின்ற சமயத்தில், ஓரிரு நிலையங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், ஊடங்கள் பிரச்சனைகளை மாத்திரம் பெரிதுபடுத்திப் பேசுகின்றன.

இதன் காரணமாக, எல்லா தடுப்பு மருந்தேற்றல் நிலையங்களிலும் பிரச்சனை உள்ளது போன்றதொரு தோற்றப்பாடு ஏற்படுகிறதென அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டிலிருந்து வரும் நபர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் விசாரணைகளுக்கு அனுப்பப்படும் போது பண மோசடி நடைபெறுகிறது என்ற வெளிப்பாடுகளில் உண்மை உள்ளது. அவ்வாறான தவறுகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும், யாரேனும் ஏதேனும் தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தால் அதனை சரிசெய்ய அரசாங்கம் தயங்காது என்றும் அவர் கூறினார்.

கொவிட் நோயாளிகள் அல்லது இறப்புகள் தொடர்பான தரவுகளில் வேண்டுமென்றே எந்த மாற்றமும் நிகழ்வதில்லை, மாற்றமாக அவ்வாறு நடைபெறுமாயின் அதனை ஒப்புவிக்குமாறு நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.

தினமும் சுமார் 12,000 பி.சி.ஆர் பரி சோதனைகளும் மற்றும் சுமார் 5,000 அன்டிஜென் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. 

கொரோனாவைக் கட்டுப்படுத்த பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. முதலாவது தடுப்பூசி வெற்றிகரமாக இடம்பெற்றபோதும் ஊடகங்கள் அதன் வெற்றியைப் பற்றி அரிதாகவே பேசுகின்றன. உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தடுப்பூசியில் நாங்கள் மிகவும் சாதகமான நிலையில் இருக்கிறோம் என்றார்.

எம்.ஏ.அமீனுல்லா

No comments:

Post a Comment