சதொசவின் விற்பனைக்காக விடுவிக்கப்பட்ட 54, 860 கிலோ வெள்ளைப்பூடு மூன்றாம் தரப்புக்கு விற்பனை : 4 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

சதொசவின் விற்பனைக்காக விடுவிக்கப்பட்ட 54, 860 கிலோ வெள்ளைப்பூடு மூன்றாம் தரப்புக்கு விற்பனை : 4 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தம்

சதொச விற்பனை நிலைய வலையமைப்புக்கு துறைமுக அதிகார சபையினால் விநியோகிக்கப்பட்ட 54, 860 கிலோ வெள்ளைப்பூடு அடங்கிய கொள்கலன்கள் இரண்டை எவ்வித அனுமதியும் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சதொச அதிகாரிகள் 4 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி குறித்த கொள்கலன்கள் இரண்டும், சதொச வர்த்தக நிலைய வலையமைப்புக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

எனினும், அக்கொள்கலன்களை மூன்றாம் தரப்பொன்றுக்கு விற்பனை செய்ய சதொத நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதன் தலைவர் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடளித்துள்ளார்.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த நால்வரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறே தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையைடுத்து, மாபோல மற்றும் வெலிசரை ஆகிய பிரதேசங்களில் இருந்து அக்கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அக்கொள்கலன்களை கொள்வனவு செய்த நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அதிகாரிகளுள், சதொச நிதிப் பிரிவின் பிரதி பொதுமுகாமையாளர் சுசிறி பெரேராவும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

சதொச விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும், புறக்கோட்டை மொத்த விநியோகஸ்தர் ஒருவருக்கு வெள்ளைப்பூடு கிலோவொன்று 135 ரூபா விகிதம் அந்த அதிகாரிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன் மொத்த பெறுமதி 74 இலட்சத்து 6100 ரூபாவாகும்.

எனினும், இதன் மொத்த சந்தைப்பெறுமதி 70 மில்லியன் ரூபா என்றும், இதனூடாக, சதொசவுக்கு 63 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment