கொரோனாத் தொற்றை கண்டறிய புதிய உபகரணம் - பேராதனை பல்கலைக்கழகம் தயாரிப்பு - சுகாதார அமைச்சர் கெஹெலியவிடம் கையளிக்கப்பட்டது - News View

Breaking

Thursday, September 9, 2021

கொரோனாத் தொற்றை கண்டறிய புதிய உபகரணம் - பேராதனை பல்கலைக்கழகம் தயாரிப்பு - சுகாதார அமைச்சர் கெஹெலியவிடம் கையளிக்கப்பட்டது

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு பரிசோதனை உபகரணமொன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் எம்.டி.லமாவங்ஷ மற்றும் அப்பரிசோதனை உபகரணத்தைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்னாந்து உள்ளிட்ட குழுவினரால் அவ்வுபகரணம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிசோதனை உபகரணத்தின் மூலம் மிகவும் விரைவாகவும் குறைந்த செலவிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளங்கண்டு கொள்ள முடியும்.

அதன்படி குறித்த உபகரணத்தைப் பயன்படுத்தி 1500 ரூபா செலவில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்று அதனைத் தயாரித்த சிரேஷ்ட விரிவுரையாளர் ருச்சிக பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

இந்த உபகரணத்திற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தொழில்நுட்பக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனைப் பதிவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இந்த பரிசோதனை உபகரணத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச பேற்றன்ட் சான்றுப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
'சுபீட்சத்திற்கான இலக்கு' என்ற செயற்திட்டத்திற்கு அமைவாக உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் கண்டுபிடிப்புக்களுக்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் முழுமையான ஆதரவையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையர்களால் இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் செயற்றிட்டமானது சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்றிருக்கும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இயலுமானவரை விரைவாக இந்த கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை முடிவிற்குக்கொண்டுவந்து, நாடு மீண்டும் இயல்புநிலையில் செயற்படுவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment