கோட்டை ரயில் நிலையம் முன்பாக கைதான இருவரும் பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

கோட்டை ரயில் நிலையம் முன்பாக கைதான இருவரும் பிணையில் விடுதலை

எம்.எப்.எம்.பஸீர்

மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக,  கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் கைதான  ஐக்கிய சுய தொழில் வர்த்தக சங்கத்தின்  தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவரையும்  பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று  அனுமதி வழங்கியது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், கொழும்பு - கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கைதான இருவரும், இன்று  கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.  

இதன்போதே அவர்களை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான  இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

மதுபான விற்பனை நிலையங்கள் கூட திறக்கப்பட்டுள்ள நிலையில், தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி  ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டதாகவும்,  தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டதாகவும் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்து பொலிஸார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் மேலும் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்படவுள்ளதால் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிசார் கோரினர்.

எனினும் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த இருவரும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டினர். 

இந்நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிவான் குறித்த இருவரையும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்தார். 

No comments:

Post a Comment