அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணை அணைக்கட்டில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா, புத்தளத்தை சேர்ந்த 21 வயதுடைய சச்சிந்த தில்ஷான் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனக் பாற்பண்ணைக்கு சொந்தமான அணைக்கட்டு ஒன்றில் நேற்று (19) மாலை 5.00 மணியளவில் ஐந்து இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். நீராடிக் கொண்டிருந்த போது, இதில் இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்போது சின்னையா ராஜா என்ற இளைஞன் நீரில் மூழ்கியபோது, சஜிந்த டில்சான் என்பவர் அவரை காப்பாற்றுவதற்கு முற்பட்ட வேலையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதற்கமைய, அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று (19) மாலையே தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், இன்று (20) திங்கட்கிழமையே அவர்களிருவரது சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன. இராணுவத்தினரும், பொதுமக்களும் இணைந்தே சடலங்களை மீட்டுள்ளனர்.

இவர்கள் கட்டிட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(கிரிஷாந்தன், கே. சுந்தரலிங்கம், எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment