ஜனாதிபதி கோத்தாபயவின் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை, நாட்டுக்கு கடவுளின் சாபமா என்று எண்ணத் தோன்றுகிறது - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

ஜனாதிபதி கோத்தாபயவின் ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை, நாட்டுக்கு கடவுளின் சாபமா என்று எண்ணத் தோன்றுகிறது - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

இராஜதுரை ஹஷான்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை நாளுக்குநாள் மக்கள் வெறுக்கிறார்களே தவிர விரும்பவில்லை. இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலையினை தற்போது உணர்கிறோம். நாட்டுக்கு கடவுளின் சாபமா என்று எண்ணத் தோன்றுகிறது. இராணுவத்தினால் அரச சேவைகளை முன்னெடுத்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சுபீட்சமான இலக்கு கொள்கை செயற்திட்டத்தை செயற்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டாலும் மக்கள் மத்தியில் சுபீட்சமான இலக்கு கொள்கை தொடர்பில் நல்ல நிலைப்பாடு ஏதும் கிடையாது.

தற்போதைய நிலைமை நாட்டுக்கு கடவுள் விடுத்த சாபமா அல்லது கடவுளின் கோபமா என மக்கள் எம்மிடம் வினவுகிறார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வருகையை மக்கள் மங்களமாக கொண்டாடினார்கள். ஆனால் இன்று அவமங்களமாகி விட்டது என கருதுகிறார்கள்.

முக்கிய அரச பதவி வகிப்பவர்கள் சுய விருப்பத்துடன் பதவியை துறக்கிறார்கள். பிறிதொரு தரப்பினர் அனைத்தையும் சகித்துக் கொண்டு ஒதுங்கி நிற்கிறார்கள்.

மத்திய வங்கியின் ஆளுநர் பெரும் மனவேதனையுடனும்,குழப்பத்துடனும் உள்ளார். இராணுவத்தினர் இராணுவ செயற்பாடுகளை விடுத்து அரச சேவைகளை முன்னெடுத்தால் பெறும் நெருக்கடி நிலை ஏற்படும்.

நாட்டை முன்னேற்றும் தலைவர் தேவை என்றே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னின்று செயற்பட்டோம். தேர்தல் காலத்தில் குறிப்பிட்டவை முற்றிலும் தலைகீழாக இன்று செயற்படுத்தப்படுகிறது.

இலங்கை சீன காலனித்துவ நாடாகும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அது இன்று நிறைவேறுகிறது. தேசிய வளங்கள் ஒவ்வொரு தரப்பினருக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாடு என்னவாகும்.

மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையை போன்ற நிலை தற்போது காணப்படுகிறது. அதுமாத்திரமல்ல இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய நிலையை தற்போது உணர்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment