மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு என்கிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண - News View

Breaking

Sunday, September 12, 2021

மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு என்கிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு எந்த நிவாரணமும் எதிர்பார்க்க முடியாது. என்றாலும் பொருளாதார நிலைமையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை அதிகரிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு என லங்கா சமசமாஜ கட்சி தலைவரும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அத்துடன் மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடுவதற்கு நேரம் கேட்டிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

காலி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கும் மக்கள் மீது தொடர்ந்தும் சுமைகளை ஏற்றுவதை சோசலிச கட்சி என்ற வகையில் நாங்கள் அதற்கு எதிர்ப்பு.

சாதாரண மக்கள் மீது வரிச் சுமைகளை ஏற்றக்கூடாது. வசதி படைத்த தனவந்தர்களிடமிருந்து வரி அறவிடுவதில் பிரச்சினை இல்லை. பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது மேலும் வரிச் சுமைகளை அதிகரிப்பது நியாயம் இல்லை.

அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்ட நிலைமை தொடர்பாக எமது 10 கட்சிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை கடந்த தினம் மேற்கொண்டோம். அதன்போது பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாட நேரம் கேட்டிருந்தோம். இதுவரை அது கிடைக்கவில்லை. என்றார்.

No comments:

Post a Comment