நான் ஜனாதிபதியாக இருந்தால் நிரூபித்துக் காட்டுவேன் - சாணக்கியன் - News View

Breaking

Friday, September 10, 2021

நான் ஜனாதிபதியாக இருந்தால் நிரூபித்துக் காட்டுவேன் - சாணக்கியன்

உண்மையை கூறினால் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். அதனால் உண்மையை கூற யாரும் முன்வருவதில்லை. நான் ஜனாதிபதியாக இருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுவேன். ஆனால் நான் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் நேற்று (09) வவுனியா தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்கு சென்றிருந்த போது வவுனியாவில் பொதுமக்களின் காணிகளை வன வளத் திணைக்களத்தினர் எல்லைப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் கூறிய மணல் அகழ்வு கருத்து தொடர்பாக நேற்றையதினம் அமைச்சர் கூறியதை நான் அவதானித்து இருந்தேன். உண்மையிலேயே இந்த மணல் அகழ்வு மட்டுமல்ல பல ஊழல் தொடர்பாக சில மோசடிகள் தொடர்பான தகவல்கள் எம்மிடம் இருக்கின்றது.

இவ்விடயங்கள் அனைத்தும் தொடர்பாக பாராளுமன்றத்திலே அவர் விவாதிக்க வருவாராக இருந்தால் நான் அங்கு இவ்விடயம் தொடர்பாக சொல்லலாம். சில தகவல்களை தந்தவர்கள் பயப்படுகின்றார்கள்.

ஏனென்றால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரியும். இந்த அரசாங்கம் கடந்த காலத்திலே சரியான தகவல்களை தருவதில்லை என்று கூறிய வைத்தியரை எத்தனையோ மணித்தியாலங்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டது‌.

அதேபோன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்ட இளைஞர் ஒருவரை எட்டு நாட்களாக விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்ததன் பின்பு தகவல் சொல்வதற்கு விரும்புகின்ற நபர்கள் கூட அதனை சொல்லுவதற்கு முன் வருவது குறைவாக இருக்கின்றது. இன்னும் இதுபோன்ற நிறைய விடயங்களை முன்வைக்கலாம். நான் ஜனாதிபதியாக இருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுவேன். ஆனால் நான் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மட்டும்தான் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad