விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்ததை போன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - பொதுபலசேனா - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்ததை போன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை முழுமையாக அழிக்க தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - பொதுபலசேனா

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்ததை போன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் தோற்றம் பெறும் தீவிரவாதத்தையும் முழுமையாக அழிக்க பாதுகாப்பு தரப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை சட்டத்தில் முன்னிலையாக்குவதை தாமதப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கம் தனது 5 வருட பதவி காலத்தில் புலனாய்வு பிரவையும், பாதுகாப்பு பிரிவையும் பலவீனப்படுத்தியதை பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட அவனது தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை போன்று பிறிதொரு தாக்குதல் நாட்டில் மீண்டும் இடம்பெறாமலிருக்க வேண்டுமாயின் புலனாய்வு பிரிவும், பாதுகாப்பு பிரிவும் பலம் பொருந்தியதாக காணப்பட வேண்டும்.

புலனாய்வு பிரிவினருக்காகவும், இராணுவத்தினருக்காகவும் குரல் கொடுத்ததால் சிறைவாசம் அனுபவித்தேன். தற்போதும் இவர்களுக்காக நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன்.

யுத்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினால் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

விடுதலை புலிகள் அமைப்பை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்குடன் போராடியதால் யுத்தத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவுக் கொண்டு வர முடிந்தது.

அதுபோலவே இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தோற்றம் பெறும் தீவிரவாதத்தை அழிக்கவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.

இஸ்லாம் மத பெயரில் அப்பாவி மக்களை இலக்காக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது.

இதற்குள் தற்போது பூகோளிய அரசியல் ஊடுறுவியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மதத் தலைவர்கள் குறிப்பிடும் கருத்துக்கள், செயற்படும் விதம் மாறுப்பட்டதாக உள்ளன.

பாதுகாப்பு தரப்பு பலவீனமடையும் வகையில் சிவில் அமைப்புக்களும், தனி நபர்களும் செயற்படுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. அடிப்படைவாத அமைப்புக்கள் நிபந்தனையற்ற வகையில் தடை செய்ய வேண்டும்.

அடிப்படைவாதிகளை சட்டத்தில் முன்னிலைப்படுத்துவதை ஒருபோதும் தாமதப்படுத்த கூடாது. நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment