இருபதாம் திருத்தத்தை ஆதரித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீனின் பகிரங்க மடல் - News View

Breaking

Monday, September 13, 2021

இருபதாம் திருத்தத்தை ஆதரித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீனின் பகிரங்க மடல்

காதி நீதி மன்றங்கள் ஒழிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் இருபதாம் திருத்தத்தை ஆதரித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய தங்களின் நிலைப்பாடு என்ன ? என்பதை அறிய விரும்புகிறேன் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்துள்ளார் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆண்டாண்டு காலமாக இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவித்து வரும் காதி நீதி மன்ற இஸ்லாமிய சட்ட நடவடி முறை ஒழிக்கப்பட இருப்பதாகவும் இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேற்படி அமைச்சரின் அறிவிப்பு தொடர்பிலும் குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பிலும் இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன?

அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கவே இருபதிற்கு கை தூக்கினோம் எனச் சொல்லும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரகளின் நிலைப்பாடு என்ன?

ஆண்டாண்டு காலமாக இலங்கை முஸ்லிம் சமூகம் அனுபவித்து வரும் இந்த அடிப்படை உரிமைக்கு ஆப்படிக்க நினைக்கும் அரசாங்க நிலைபாட்டை மாற்றி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமையை பாதுகாக்க தாங்கள் எடுத்த காத்திரமான நடவடிக்கைகள் என்ன?

தனியொரு நபரை சர்வாதிகாரி ஆக்கும் பதினெட்டாம் திருத்தத்தின் மிகப் பாதகமான விளைவுகளை நீக்கி நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கிலேயே பத்தொன்பதாம் திருத்தம் அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்டது.

எதோச்சாதிகார ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பதில் சொல்லும் ஒருவராக மாற்றிய பத்தொன்பதாம் திருத்தை இல்லாதொழித்து நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டு செல்லும் இருபதாம் திருத்தத்தைத ஆதரிக்க வரிந்து கட்டிக் கொண்டு நின்ற நீங்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்கு உலை வைக்கும் காதி நீதி மன்ற சட்ட நடவடி முறை ஒழிப்புத் தொடர்பில் அதனைத் தடுக்க நீங்கள் குழுவாகவும் தனியாகவும் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் மக்களைத் தெளிவு படுத்துவீர்களா?

நீங்கள் மறைமுகமாக தலைவராக கொண்டாடும் நீதி அமைச்சர் அலிசப்ரி காதி மன்ற நீதி நடவடி முறை ஒழிப்பது உறுதி என்கின்றார்.தான் இது தொடர்பில் தன்னிடம் இருந்த ஆலோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறும் அவர் காதி நீதிமன்றத்தை ஒழித்து பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் முஸ்லிம்களின் பலதார திருமணத்தையும் தடை செய்ய உள்ளதாக கூறுகிறார்.

இவரைத் தவிர இருபத்தொன்பது முஸ்லிம் அல்லாத அந்நியரால் முஸ்லிம்களின் சமயம் தொடர்பிலான குறித்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை எப்படி ஏற்றுக் கொள்வது?

அண்மையில் அமைச்சர் அலி சப்ரியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அழைத்து வந்த போது நீங்கள் எல்லாம் அவருடன் வந்தீர்கள்.அதன்போது மட்டக்களப்பு பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் ,உலமாக்கள் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து காதி நீதிமன்றங்கள் ஒழிக்கப்படக் கூடாது என அமைச்சர் அலி சப்ரி உட்பட உங்கள் அனைவருக்கும் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் தெளிவு படுத்தினோம்.

இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உங்கள் முன்பாக வாக்களித்த அமைச்சர் அமைச்சரவையின் பேச்சாளராக மாறி முஸ்லிம்களின் உரிமைக்கு எதிரான அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கிறார்.

இருபதிற்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவேதான் அரசாங்க மேல் மட்டத்தோடு எங்களால் பேச முடிகிறது என அண்மையில் நான் சந்தித்த இருபதிற்கு ஆதரவு வழங்கிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பாதுகாக்கவே இருபதாம் திருத்தத்தை ஆதரித்தோம் என நீங்கள் கூறுவது உண்மையானானால் இந்த காதி நீதி மன்ற சட்ட நடவடி முறை ஒழிப்புத் தொடர்பிலான அமைச்சரவை தீர்மானத்தை இல்லாது செய்யுங்கள்.

முஸ்லிம் உரிமைகளுக்கு ஆப்படிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.

இருபதாம் திருத்தம்,உதய கம்மன்பில எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் அவசர கால விதிகள் தொடர்பான அண்மைய சட்ட மூலங்கள் தொடர்பில் அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த நீங்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமை தொடர்பில் நீங்கள் எடுக்கப் போகும் நிலைப்பாட்டை முழு இலங்கை முஸ்லிம்களுடன் வழிமேல் விழிவைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த கால சட்ட மூலங்களில் சாக்குப் போக்கு காட்டிய நீங்கள் இந்த விடயத்தில் எந்த சாக்குப் போக்கும் காட்ட முடியாது. உங்கள் சமூகம் சார்ந்த முடிவை நம்பிக்கையுடன் எதிர்பார்தவனாக.

No comments:

Post a Comment