எம்.எஸ். தௌபீக் எம்பிக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதினார் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் - News View

Breaking

Monday, September 13, 2021

எம்.எஸ். தௌபீக் எம்பிக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதினார் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் எம். நயீமுல்லாஹ்

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கினால் "மறைந்த எமது தேசியத் தலைவரின் 21 வது வருட நினைவு கூர்தல் நிகழ்வு - 2021" எனும் தலைப்பிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் எம். நயீமுல்லாஹ்வுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் தனது முகநூலில், திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கு பதில் கடிதம் ஒன்றினை எழுதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அக்கடிதம் பின்வருமாறு...! 

சகோ. எம். எஸ். தௌபீக்,
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு,
‘அஸ்ஸலாமு அலைக்கும்’

மறைந்த எமது தேசியத் தலைவரின் 21வது வருட நினைவு கூர்தல் நிகழ்வு - 2021

மேற்படி விடயம் சம்பந்தமாக 12.09.2021 திகதியிட்டு உங்களால் வட்ஸ்அப் மூலம் எனக்கு அனுப்பபட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்து 21 ஆண்டுகள் பூர்த்தியாகும் செப்டெம்பர் 16 ஆம் திகதி கட்சியின் சார்பில் மாவட்ட மட்டத்தில் அன்னாரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்துக்காக பிரார்த்தனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு அதில் கேட்டிருந்தீர்கள். அவ்வாறு கேட்பதற்கு உங்களுக்கு இருக்கின்ற அருகதை தொடர்பில் ஆச்சரியப்பட்டவனாக இதனை எழுதுகிறேன்.

‘மர்ஹூம் அஷ்ரஃப் நட்ட மரத்தின் நிழலில் நிற்கும் நாம் அவருக்காக என்றும் பிரார்த்தனை செய்ய கடமை பட்டுள்ளோம்’ என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நீங்கள் எந்தக் கூடாரத்தின் நிழலின் கீழிருந்து எமக்கு அறிவுறை வழங்குகிறீர்கள் என்பது எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தேசிய மட்டத்திலும் இது போன்ற நினைவு தினங்கள் உட்பட கட்சியின் பல்வேறுபட்ட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திய அனுபவம் எமக்கு உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் தோளோடு தோள் நின்று அர்ப்பணிப்புடனும் ஆவலுடனும் ஒத்துழைத்த மறக்க முடியாத பல சகோதரர்கள் இன்று எம்முடன் இல்லை. 

கிராமங்கள் தோறும் எமக்கு ஆதரவளித்த இளைஞர்கள் மற்றும் பெரியவர்களால் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத பாவிகளாக நாங்கள் ஆகியிருக்கிறோம். எடுத்துச் சொல்ல கொள்கை என்று ஏதுமற்று தற்போதைய தலைவரின் தனிமனித ஆளுமையின் பலத்தை பாவித்தே கட்சியை கட்டி இழுத்துப்போக பெரிதும் பிரயத்தனப் படுகிறோம். இந்த இழி நிலைக்கான நீங்கள் நன்கறிந்த காரணங்கள் பற்றி எடுத்துச் சொல்லி எனது நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

பெருந்தலைவர் அஷ்ரஃபின் பன்முக ஆளுமை, தியாகம், அர்ப்பணிப்பு, சேவைகள் என்றெல்லாம் அவரை சிலாகித்துச் சொல்லியிருக்கிற நீங்கள் அவர் உயிரோடு இருந்திருந்தால் யாரேனும் ஒருவரால் கட்சியின் கட்டுக்கோப்பை மீறி ஒரு அடியேனும் நகர்ந்திருக்க முடியுமா என்பதையும், கூட்டுப் பொறுப்பை மீறி நடக்காதீர்கள் என ஒவ்வொருவரது காலடிக்கும் வந்து கெஞ்சிக் கேட்கின்ற அளவுக்கு அந்த தலைமையை கீழே இறக்கியிருக்க முடியுமா என்பது பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். 

அது பற்றிய அனுபவத்தை பெற்றிருக்க அன்று நீங்கள் கட்சியில் இல்லாமல் இருந்திருக்கலாம். என்றாலும், அவ்வாறு ஒரு உறுப்பினர் பாராளுமன்றத்துக்குள் செயற்பட்டிருந்தால் அக் கட்டிடத்தை விட்டு வெளியேற முன்னரே அவர் கட்சியின் அங்கத்துவம் மற்றும் அனைத்து விதமான அந்தஸ்த்துக்களில் இருந்தும் தூக்கி வீசப்பட்ட அதிரடிச் செய்தி நாடு முழுவதும் புயலாக பறந்திருக்கும் என்பது பற்றி நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டுத்தான் இருப்பீர்கள்.

மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் அமைச்சராக இருந்தபோது கட்சியின் திகாமடுல்ல மாவட்ட சக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹூம் யூ.எல்.எம். மொஹிதீன் (தொப்பி மொஹிதீன்) அவர்கள் அமைச்சர் பௌஸியின் தலைமையில் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற வைபவமொன்றில் பங்கு பற்றியிருந்தார். அன்று அமைச்சர் பௌஸியின் பிறந்த தினம் என நினைக்கிறேன், அங்கு மர்ஹூம் மொஹிதீன் உரையாற்றுகையில் அமைச்சர் பௌஸியின் சேவைகளை மெச்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் அமரர் பண்டாரநாயக்க மற்றும் திருமதி பண்டாரநாயக்க ஆகியோரை போற்றியும் பேசியிருந்தார். 

அந்தச் செய்தியை அடுத்த நாள் அரச பத்திரிகையொன்றில் கண்ட தலைவர், மர்ஹூம் மொஹிதீனுக்கு எதிராக (ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்ற கோதாவில்) விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புமாறு அன்றைய பொதுச் செயலாளர் சகோ. ரவூப் ஹக்கீமை பணித்திருந்தார். அதன் பிறகு நடைபெற்ற உயர் பீடக் கூட்டத்தில் மர்ஹூம் மொஹிதீன் அழாக்குறையாக தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டார். (அல்லாஹ் அவர்கள் இருவரையும் பொருந்திக் கொள்ளவேண்டும்) இவ்வளவுக்கும் அமைச்சர் பௌஸி பொது வெளியில் முஸ்லிம் காங்கிரஸை சமூகத்துக்கு அவசியமற்ற ஒரு இனவாத கட்சியாக விமர்சித்து வந்ததே காரணம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த நிலையில், இன்றைய அரசாங்கம் ஒட்டுமொத்த முஸ்லிம்களது நலன்கள் சார்ந்த விடயங்களில் எவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறது என்பதை நீங்கள் ஒன்றும் அறியாதவரல்லவே. “தலைவர் மட்டும் எதிர்க்க எந்த முகத்தோடு உங்களது ஏனைய பிரதிநிதிகள் அவர்களுக்கு சார்பாக கை தூக்குகிறார்கள்” என்ற கேள்வி மற்றவர்களால் எழுப்பப்படுகின்ற போதெல்லாம் பதிலின்றி நாங்கள் வெட்கித் தலை குனிவதைத் தவிற வேறு வழி தெரியவில்லை.

ஸ்தாபகத் தலைவர் எம்மை விட்டுப் பிரிந்து, சகோ. ரவூப் ஹக்கீம் தலைவரக நியமனம் பெற்று, நீங்கள் கட்சிக்குள் நுழைந்து இம்மாதத்துடன் 21 வருடங்கள் பூர்த்தியாவது உண்மைதான்.

சகோ. ரவூப் ஹக்கீம் தலைமத்துவத்தை பொறுப்பேற்ற நாள் தொட்டு இன்று வரைக்கும் ஒவ்வொரு தேர்தல்களின் பின்னரும் கட்சி வாக்காளர்களது ஆணைக்கு மாற்றமாக செயற்பட முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் தலைமையின் கட்டுப்பாட்டில் கட்டிப்போட்டு வைத்துக்கொள்ளவே அதிக காலத்தை விரயம் செய்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுவும் கூட, உங்களது முதலாவது பாராளுமன்ற பிரவேசத்துடன் கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலிலிருந்து உங்களாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 

அந்த துர்திர்ஷ்ட நிகழ்வு பற்றி இங்கே மேலதிகமாக எதையும் நான் எழுத விரும்பவில்லை. ஏனெனில், அதன் பின்னரான உங்களது நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு வரையில் கட்சியையும் அதன் தலைமையையும் பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தது என்பதையும் நான் மறக்கமாட்டேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களது ஒற்றுமையே கட்சித் தலைமையினதும் ஏனைய உறுப்பினர்களதும் குரலுக்கு வலு சேர்க்கிறது. அதுவே இதுவரை காலமும் சமூகத்தின் குரலாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஓங்கி ஒலித்து வந்திருக்கிறது. இன்று நம்மவர்களாலேயே தொடர்ந்தும் அக் குரல்வளை நசுக்கப்பட்டு வருவது துரதிஷ்டமானது. எத்தனை முறைதான் தனது குரல்வளை நசுக்கப்பட்டாலும் பொறுத்துப் போகிறவரும் நல்லவரென நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறவருமான தலைவர் மீதும் பொத்துக்கொண்டு கோபம் பொங்கி வரத்தான் செய்கிறது. 

கடந்த காலங்களில் தனது கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் உயர் பதவிகளை வழங்கி கட்டுக்குள் வைத்துக் கொள்வதையும் ஒரு உத்தியாகவே அவர் பாவித்து வருகிறார் என்பதையும் நாம் அவ்தானித்து வருகிறோம். அண்மையில் உங்களுக்கும் கூட ஒரு பதவி வழங்கப்பட்டதாக உயர்பீட உறுப்பினர்களான நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். கட்சி யாப்பின் பிரகாரம் தலைவரது தற்றுணிபு அதிகாரம் சார்ந்த விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

மாபெரும் தலைவர் மறைந்த நாள் தொட்டு அவரை நினைக்கின்ற பொழுதெல்லாம் உள்ளத்தால் அவருக்காக பிரார்த்திக்காத உண்மையான போராளிகள் எவரும் இந்த பேரியக்கத்துக்குள் இருக்க முடியாது. அதேபோல யாரும் கேட்காமலேயே நீண்டகாலமாக இதய சுத்தியுடன் அவரது நினைவு தினங்களும் அப் போராளிகளால் ஆங்காங்கே நடத்தப்பட்டும்தான் வந்திருக்கின்றது.

அவ்வாறிருக்க, “கருத்து வேறுபாடெனும் கறையான்கள் வந்து உங்கள் புரிந்துணர்வை சீரழிக்கும்; புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று தனது இறுதி நேரத்தில் கூட கட்சிக்குள் ஒற்றுமையை வலியுறுத்தி அவர் சொல்லிவிட்டுச் சென்ற வசிய்யத்துக்கு மாற்றம் செய்வதன் மூலம் கட்சியின் கட்டமைப்புக்களை சீர்குலைத்தவர்களாலேயே இன்று அந்த மாமனிதரை கொண்டாட தொண்டர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவது பலத்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இறுதியாகவும் உரிமையுடனும் உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்ம்புவதாவது, வெறும் சுயநலச் சடங்காக மாத்திரம் ஆண்டுக்கு ஒருமுறை தலைவருக்கு நினைவேந்தல் நடத்துவதை விடுத்து, உளத்தூய்மையுடன் அவரை நேசிப்பவர்களாக இருந்தால், அவரது இயக்கத்தை தேசிய மட்டத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் உங்களுக்கு இருந்தால் ஒரே கொள்கையுடன் ஒரே தலைமைக்குக் கட்டுப்படுங்கள். உங்களது குரலும் செயலும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றுபட்டதாகவே அமையட்டும். அதுவே அந்த மாமனிதன் கண்ட கனவுமாகும். அன்னாரது நினைவாக, அதற்கான உத்தரவாதத்தையே அன்றி வேறெதனையும் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி உங்கள் நால்வரிடத்திலிருந்தும் நாங்கள் எதிபார்கவில்லை.

அப்படியும் முடியாவிட்டால், தயவு செய்து உங்களால் எமது நெஞ்சங்களுக்குள் கொளுத்தப்பட்டு நீறு பூத்துப் போயிருக்கிற வெந்தணலை இதுபோல அடிக்கடி ஊதிக் கொழுந்தாக்கி எமது உணர்வுகளை எரிக்க முற்படாதீர்கள்.

‘வஸ்ஸலாம்’
இப்படிக்கு,
எம். நயீமுல்லாஹ்
12.09.2021

பி.கு: உங்களால் எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தையும் இத்துடன் உங்களுக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளேன்.

No comments:

Post a Comment