வெளிநாட்டு வேலை பெற்று செல்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு : விரைவாக தீர்த்து வைக்க நிதியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Monday, September 13, 2021

வெளிநாட்டு வேலை பெற்று செல்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு : விரைவாக தீர்த்து வைக்க நிதியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை

வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எத்தகையதென கண்டறிந்து அதனை விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 

அலரி மாளிகையில் நடைபெற்ற வெளிநாட்டு அந்நியச் செலாவணி தொடர்பான செயலணியின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு சந்தையில் இலங்கையருக்கு அதிகளவான கேள்விகள் நிலவுவதாகவும் அந்த வேலை வாய்ப்புகளுக்கு அவர்கள் செல்வதில் ஏதாவது தடைகள் இருக்குமானால் அதனை விரைவாக நீக்குவதற்குள்ள அவசியம் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

அதே போன்று தற்போது வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள தரப்பினருக்கு விமானத்தில் ஆசன வசதிகளில் நிலவும் தட்டுப்பாடு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் சம்பந்தமாக அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

தேவைகளுக்கு முதன்மையளித்து எமது நாட்டின் விமான நிறுவனம் மட்டுமன்றி வெளிநாட்டு விமான நிறுவனங்களையும் பயன்படுத்தி மேற்படி சிக்கல்களுக்கு விரைவாக தீர்வு பெற்றுக் கொடுக்குமாறும் அவர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பதில் வெளிநாட்டில் தொழில் புரிவோர் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.அதனைக் கவனத்தில் கொண்டு அவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை விரைவாக அடையாளம் கண்டு அதனை தீர்த்து வைப்பது உரிய பிரிவினரின் பொறுப்பாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுத்தல் மூலம் வெளிநாட்டு அந்நிய செலாவணியை ஈட்டிக் கொள்வது தொடர்பில் இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதம் காணப்படும் முன்னேற்றம் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதனை மென்மேலும் அதிகரிப்பதற்குள்ள சிக்கல்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment