கட்டுப்பாட்டை இழந்து திடீரென பாலத்திலிருந்து வீழ்ந்த கொள்கலன் வாகனம் : நசுங்கிய காரிற்குள் தெய்வாதீனமாக தப்பிய சாரதி - மயிரிழையில் தப்பிய மோட்டார் சைக்கிள் சாரதி - News View

Breaking

Monday, September 13, 2021

கட்டுப்பாட்டை இழந்து திடீரென பாலத்திலிருந்து வீழ்ந்த கொள்கலன் வாகனம் : நசுங்கிய காரிற்குள் தெய்வாதீனமாக தப்பிய சாரதி - மயிரிழையில் தப்பிய மோட்டார் சைக்கிள் சாரதி

இரத்தினபுரி, கெட்டன்தொல பகுதியில் உள்ள வீதியில் பார ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி பாலமொன்றிலிருந்து புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (13) காலை குறித்த வீதியில் சென்று கொண்டிருந்த கொள்கலன் லொறி, கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறிக்கு பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரின் தலைக்கவசத்திலிருந்து கமெராவில் இவ்விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது.

வீதி அபிவிருத்தி பணி இடம்பெற்று வரும் குறித்த வீதியில் லொறி விபத்திற்குள்ளாக முன் மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும், கார் ஒன்றுடனும் மோதுவது பதிவாகியுள்ளது.

திடீரென வாகனத்தின் தடுப்பு (பிரேக்) உரிய முறையில் செயற்படாததை அறிந்த சாரதி, குறிப்பிட்ட தூரத்திற்கு வாகனத்தின் ஒலியை எழுப்பியவாறு செல்கின்றார்.
இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை பக்கவாட்டாக தள்ளியதால், வீதியின் ஓரத்திலிருந்த வடிகானுக்குள் வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி, "எனக்கு முடியாமல் உள்ளது" என தெரிவித்து நடந்து வருவதை காண முடிகின்றது.

அதனைத் தொடர்ந்து காரொன்றுடன் மோதியவாறு, வாகனம் தொடர்ந்தும் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து வீழ்வதை அவதானிக்க முடிகின்றது.

அதன் பின் நசுங்கிய காரிலிருந்து அதன் சாரதி உயிராபத்து இன்றி நொண்டியவாறு வெளியில் வருவதை அதில் காண முடிகின்றது.

குறித்த விபத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்த கொள்கலன் லொறியின் சாரதி உள்ளிட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad