புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பணியகம்? : மேலும் இரு வார காலம் தாமதமாகும் மிலிந்த மொரகொடவின் பயணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பணியகம்? : மேலும் இரு வார காலம் தாமதமாகும் மிலிந்த மொரகொடவின் பயணம்

(ஆர்.ராம்)

இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பணியகம் ஒன்றை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக, உயர்ஸ்தானிகராலயங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரி அலுவலகத்தினை விடவும் அதிகாரங்களும், அலுவலர்களும் கூடிய வகையிலான பணியகம் ஒன்றை அமைப்பதற்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட தமது பதவிகளை பொறுப்பேற்பதற்காக அங்கு செல்வதற்கு மேலும் இரு வார காலம் தாமதமாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினமான இன்றையதினம் அவர் பதவி ஏற்பதாக பாராளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டு அமைச்சு சார்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய குறிப்பிட்டிருந்தார்.

எனினும், தற்போதைய நிலையில் மிலிந்த மொரகொடவின் புதுடெல்லிக்கான பயணம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா நிலைமைகள் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட, இரண்டு பகுதிகள் கொண்ட, 27 பக்கங்களிலான இலங்கை இந்திய உறவுகளை மேம்படுத்துவதற்கான ‘பாதை வரைவு’ ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்தப் பாதை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு, மத, கலாசார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான யோசனைகள் அந்தப் பாதை வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், புதுடெல்லியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு அதிகாரிக்கு மேலதிகமாக பாதுகாப்பு ஆலோசகர் பணியகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் இந்த பாதை வரையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்டொன்றுக்கு நான்கு தடவைகள் இருதரப்பு மற்றும் பலதரப்பு படைத்தரப்பு கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்ட பரிந்துரையொன்று காணப்படுகின்றது.

மேலும், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு தலைமை அதிகாரி, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படை தளபதி மற்றும் கடலோர காவல்படை பணிப்பாளர் ஆகியோர் ஆண்டுக்கு ஒருமுறை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் பரிந்துரையொன்றும் உள்ளது.

No comments:

Post a Comment