இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து..! - News View

About Us

About Us

Breaking

Sunday, August 15, 2021

இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து..!

(ஆர்.ராம்)

இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கான பயிற்சியை இடைநிறுத்துவதற்கு ஸ்கொட்லாந்து பொலிஸார் தீர்மானித்துள்ளதாக ரைம்ஸ் யு.கே.செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அத்தீர்மானத்தினை ஸ்கொட்லாந்து எடுத்தமைக்கு வரவேற்பு தெரிவிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன், தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாம் டெரி ஆகியோரே மேற்கண்டவாறு வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

அவ்விருவரும், ஸ்கொட்லாந்தின் தீர்மானம் நற்செய்தியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு இலங்கையின் பொலிஸ்துறைக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிகளை அளிப்பதை மீள்பரிசீலனை செய்யும் அதேநேரம் அத்தரப்புக்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றமையை கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக இலங்கை பொலிஸார் தம் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்தரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும், உரிய மறுசீரமைப்பை மேற்கொள்ளுதல் ஆகிய விடயங்களை முன்னெடுக்கும் வரை, அவர்களுக்கான பயிற்சிகளை இடைநிறுத்துமாறு ஸ்கொட்லாந்து பொலிஸாரிடத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்திருந்தது.

குறிப்பாக, கடந்த ஆறாம் திகதி மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட நீண்ட அறிக்கையில், இலங்கையில் கொரோனா பரவல் தொற்றுநோய்க்காலத்தின் போது, அதற்கான கட்டுப்பாடுகளை பயன்படுத்தி சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக தடுப்புக்காவலுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தது.

இதனையடுத்தே ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது கொரோனா காலத்திற்கான தற்காலிக நடவடிக்கை ஒன்று அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment