வீடுகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களுக்கு விசேட மருந்துகள் அத்தியாவசியமற்றது : கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகிறார் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர - News View

About Us

About Us

Breaking

Monday, August 9, 2021

வீடுகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களுக்கு விசேட மருந்துகள் அத்தியாவசியமற்றது : கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகிறார் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தின் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அறிகுறியற்ற அல்லது தொற்று தீவிரமடையாத தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் நடைமுறை வெற்றிகரமாக இடம்பெறுவதால், இன்று திங்கட்கிழமை இந்த நடைமுறை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டது.

இவ்வாறு வீடுகளிலேயே சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் அதிகளவில் சோர்வடையக் கூடியவாறான கடுமையான வேலைகளை செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர தெரிவித்தார்.

இவ்வாறு வீடுகளிலேயே சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் ஓய்வாக இருக்க வேண்டும். போதியளவு தண்ணீர் அருந்துவதோடு, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். சாதாரண காய்ச்சல் காணப்படுமாயின் 'பெரசிடமோல்' 2 மாத்திரம் எடுத்துக் கொள்வது போதுமானது. மேலதிக மருந்துகள் அத்தியாவசியமற்றவை என்றும் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர சுட்டிக்காட்டினார்.

வீடுகளிலேயே சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட வைத்திய நிபுணர் ஹர்ஷ சதிஷ்சந்திர மேலும் குறிப்பிடுகையில், கொவிட் பரவல் இரண்டாம் அலையை விட தற்போதைய அலையில் தொற்றாளர்களுக்கு வெகுவிரைவாகவே தொற்று அறிகுறிகள் தென்படுகின்றன. சுமார் 3 - 5 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படுகின்றன. அதன் பின்னர் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் தீவிரமடைந்து சிக்கல் நிலைமை ஏற்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இவ்வாறு எந்தவொரு அறிகுறிகளும் அற்ற தொற்றாளர்களுக்கு தற்போது வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீடுகளிலேயே சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் ஓய்வாக இருக்க வேண்டும். போதியளவு தண்ணீர் அருந்துவதோடு, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சோர்வடையக்கூடிய கடுமையான வேலைகளை செய்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். சாதாரண காய்ச்சல் காணப்படுமாயின் 'பெரசிடமோல்' 2 மாத்திரம் எடுத்துக் கொள்வது போதுமானது. மேலதிக மருந்துக்கள் அத்தியாவசியமற்றவை.

எனினும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கொவிட் தொற்றுக்கு உள்ளானால் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதில் எவ்வித சிக்கலும் இல்லை. கொவிட்-19 தொற்றுக்கென விசேட மருந்துகளை உட்கொள்ள வேண்டிய தேவை கிடையாது.

எனினும் ஓரிரு தினங்களில் காய்ச்சல் அதிகரித்தல், தொடர்ச்சியான இருமள் மற்றும் மலசலகூடம் சென்று வந்ததன் பின்னர் அல்லது குளித்ததன் பின்னர் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட ஏதேனும் சங்கடங்கள் ஏற்பட்டால் துரிதமாக உரிய சுகாதார தரப்பினரை தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும்.

திடீரென சிறிது நேரத்திற்கு மாத்திரம் சுவாசிப்பதில் சிக்கல் காணப்படுமாயின் படிகளில் ஏறி இறங்குதல் அல்லது கதிரையில் எழுந்து அமர்தல் உள்ளிட்டவற்றை சுமார் 10 தடவைகள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதன் பின்னர் சுவாச சிக்கல் இல்லை என்று தொற்றாளர் உணர்ந்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் தொடர்ந்தும் சுவாசிப்பதில் சிக்கல் காணப்படுமாயின் வைத்திய அதிகாரிக்கு அறிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

எவ்வாறிருப்பினும் இதுவரையில் வீடுகளிலேயே சிகிச்சை பெறும் தொற்றாளர்களில் 70 - 80 சதவீதமானோர் விசேட சிகிச்சைக்கான தேவை அற்றவர்களாகவே உள்ளனர். எனவே தேவையேற்பட்டால் மாத்திரமே தொற்றாளர்கள் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

வீட்டில் ஒருவர் மாத்திரமே தொற்றாளராகவும் ஏனைய எவருக்கும் தொற்று ஏற்படவில்லை எனில் சமூகப்பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பாக செயற்படாவிட்டால் அவர்கள் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

மேலும் தனியொரு அறையில் தொற்றாளரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகள் காணப்பட்டால் மாத்திரமே அவர் வீட்டில் வைக்கப்படுவார். தனியறை வசதிகள் இல்லாதபட்சத்தில் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்களாயினும் வீடுகளில் சிகிச்சையளிக்கப்பட மாட்டாது.

இது தொடர்பில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி நேரடியாக ஆராய்ந்து தீர்மானிப்பார். எவ்வாறிருப்பினும் வீடுகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் தொற்று முழுமையாக குணமடையும் வரை மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment