முரண்பாடான கருத்துக்கள் பொதுஜன பெரமுன கூட்டணியை பலவீனப்படுத்தும் - அமைச்சர் வாசு - News View

About Us

About Us

Breaking

Sunday, August 29, 2021

முரண்பாடான கருத்துக்கள் பொதுஜன பெரமுன கூட்டணியை பலவீனப்படுத்தும் - அமைச்சர் வாசு

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்திற்காக பேச்சு சுதந்திரம் தடை செய்யப்படவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை கிடையாது என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை மூன்று வார காலத்திற்கு மூடுமாறு அரசாங்கத்தில் உள்ள பத்து பிரதான பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

சுகாதார தரப்பினரது கோரிக்கைகளுக்கு அமைய செயற்பட்டோம். நாட்டு மக்களின் சுகாதாரம் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உண்டு.

பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்ட கருத்து பங்காளி கட்சிகளை இவர்கள் எந்தளவிற்கு மதிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இவரது கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை கிடையாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்திற்காக பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. கட்சி என்ற ரீதியில் மாத்திரமே கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளோம்.

அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டிய நோக்கம் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு கிடையாது. முரண்பாடான கருத்துக்கள் கூட்டணியை பலவீனப்படுத்தும். குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பங்காளி கட்சிகளுக்கு உண்டு என்றார்.

No comments:

Post a Comment