உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம் தொடர்பில் காலத்தை வீணடித்து வரும் அரசாங்கம் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளையும் செவிமெடுக்காது அசட்டைத்தனமாக இருக்கிறது - அருட் தந்தை சிறில் காமினி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம் தொடர்பில் காலத்தை வீணடித்து வரும் அரசாங்கம் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளையும் செவிமெடுக்காது அசட்டைத்தனமாக இருக்கிறது - அருட் தந்தை சிறில் காமினி

(எம்.எம்.சில்வெஸ்டர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம் தொடர்பில் காலத்தை வீணடித்து வரும் இந்த அரசாங்கம் நாட்டில் நிலவுகின்ற கொவிட்19, விவசாயிகளின் உரப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளையும் செவிமெடுக்காது அசட்டைத்தனமாக இருக்கிறது. இந்த அரசாங்கம் தமது கொள்கையை மாற்றாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது என அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.

கொழும்பு-10, சீ.எஸ்.ஆர். நடுநிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், "உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலில் பலியானவர்கள் தீவிரவாதிகளோ, குற்றவாளிகளோ அல்ல. அவர்கள் கடவுளை வணங்குவதற்கும் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும் ஆலயத்துக்கு சென்றவர்கள். அதுபோலவே ஹோட்டல்களிலும் இருந்தவர்கள் குற்றவாளிக‍ளோ பயங்கரவாதிகளோ அல்ல. இந்த சம்பவம் கடந்த அரசாங்கத்தால் இளைக்கப்பட்ட தவறு என்றால், அந்த தவறை இந்த அரசாங்கம் தேடிப் பார்க்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இதுவரை இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது இருப்பது வேதனையளிக்கிறது.

இந்த விசேட நிபுணர்களின் பரிந்துரைகளை செவிமடுக்காது காலம் தாழ்த்துவதுடன், குற்றவாளிகளை சுதந்திரமாக திரிய விட்டுள்ளனர்.

இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சத்தை விளைவித்த ஓர் பாரிய சம்பவமாகும். இது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இதில் பாரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது. 30 வருட யுத்தத்தில் கூட இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசேட நிபுணர்களின் பரிந்துரைகளை செவிமடுக்காது உள்ள‍து போலவே, சுகாதரத்துறை விசேட நிபுணர்களின் பரிந்துரைகளையும் இந்த அரசாங்கம் செவிமடுக்காது உள்ளது.

தாக்குதல் நடந்த தினமான காலை 6 மணிக்கு கூட தகவல் கிடைத்தும் அதை தடுக்காது இருந்துள்ளமை தீவிரவாத தாக்குதலை நடத்திய சஹ்ரானின் செயற்பாட்டுக்கு ஒப்பானதுதான். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. அரச அதிகாரிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் தமது கடமைகள், பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம் தொடர்பில் செவிமடுக்காதுள்ள காலத்தை வீணடித்து வரும் இந்த அரசாங்கம் நாட்டில் நிலவுகின்ற கொவிட்19, விவசாயிகளின் உரப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளையும் செவிமடுக்காது அசட்டைத்தனமாக இருக்கிறது. 

இந்த அரசாங்கம் தமது கொள்கையை மாற்றாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது. தமது அதிகாரத்தை விடவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரச தலைவர்கள் முன்னிற்க வேண்டும்." என்றார்.

No comments:

Post a Comment