ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதை உறுதிப்படுத்துவோம் என்று புதிய காணொளியொன்றை தலிபான் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்த காணொளியில் தலிபான் துணைத் தலைவர் முல்லா பராதார் அகுந்த் பேசியிருக்கிறார்.
அதில் அவர், "ஆப்கான் மக்கள் தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது," என்று அவர் கூறியுள்ளார்.
"இப்போது சரி செய்வதற்கான நேரம். எங்களுடைய சேவையை இந்த தேசத்துக்கு வழங்குவோம். ஒட்டு மொத்த தேசத்திலும் அமைதியை ஏற்படுத்துவோம். மக்களின் வாழ்வை மேம்படுத்த இயன்ற அனைத்தையும் செய்வோம்," என்று முல்லா பராதார் அகுந்த் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளியில் பேசும்போது அவரைச் சுற்றிலும் பிற தலிபான் அமைப்பின் போராளிகளும் நின்றிருந்தனர்.
"நாங்கள் வந்த வேகத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நாங்கள் எட்டியிருக்கும் நிலையும் யாரும் எதிர்பார்த்திருக்காதது," என்று முல்லா பராதார் அகுந்த் பேசியிருக்கிறார்.
காபூல் விமான நிலையத்தில் முண்டியடித்த பொதுமக்கள்
இதற்கிடையே, தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்று விட்டதால் அங்கு வாழ அஞ்சிய பொதுமக்கள் பலரும் காபூல் நகர விமான நிலையத்துக்குள் குவிந்து வருகின்றனர்.
அந்த விமான நிலையத்தின் பாதுகாப்பு தற்போது நேட்டோ கூட்டுப்படைவசம் உள்ளது. இருந்தபோதும், ஆங்காங்கே நேற்று மாலை முதல் துப்பாக்கி சூடு சத்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பயணிகள் சேவை அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிலைய குழப்பத்தைத் தொடர்ந்து, அங்கு வாழும் இந்தியர்களை மீட்க இன்று இரண்டாவது நாளாக இரண்டாவது மீட்பு விமானத்தை அனுப்ப உத்தேசித்திருந்த இந்திய அரசு தமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
காபூல் நகரில் பாதுகாப்பான சூழலுக்கு உத்தரவாதம் கிடைக்கும்வரை விமான சேவையை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தலிபான் எழுச்சி பெற்றது எப்படி?
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள் "வெற்றி பெற்றதாக" அறிவித்துள்ளனர். இதனால் அங்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகளின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.
"போர் முடிந்துவிட்டது" என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சட்டென ஒரே நாளில் சூழல் மாறிவிட்டதால், காபூல் முழுக்க குழப்பம் நிலவி வருகிறது. குடிமக்களும், வெளிநாட்டினரும் காபூலை விட்டு வெளியேறிவிட முயற்சி செய்து வருகிறார்கள்.
விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியுள்ளதால் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கவுன்டர்களில் ஊழியர்கள் இல்லை. மக்கள் விமானங்களை நோக்கி முண்டியடித்துக் கொண்டு ஓடுவதாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய பிறகு தலைநகரான காபூலை தாலிபன்கள் அதிரடியைகக் கைப்பற்றினர். முதலில் நகர எல்லைக்கு வெளியே தங்கியிருந்த தங்களது படைகளை நகருக்குள் நுழையுமாறு தலிபான் இயக்கம் உத்தரவிட்டது.
பல மாதங்களுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி தொடங்கி விட்டாலும் கடந்த சில நாள்களில் தலிபான்களின் வேகம் தீவிரமடைந்தது. வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கே இது அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்கப் படைகள் வெளியேறினாலும், ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் சில காலத்துக்குத் தாக்குப் பிடிப்பார்கள் என்று அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் கருதியிருந்தன. ஆனால் சில நாள்களிலேயே எந்தத் தடையும் இல்லாமல் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
அதிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தலைநகர் காபூலையும், அதிபர் மாளிகையையும் கைப்பற்றியது பலராலும் நம்பமுடியாத பேரதிர்ச்சியாக இருக்கிறது.
ஏற்கெனவே பெரும்பாலான வெளிநாட்டுப் படைகள் வெளியேறிய பிறகு மிக வேகமாக பல நகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர்.
அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறுவதை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். வேறொரு நாட்டின் உள்நாட்டுப் போருக்கு நடுவே முடிவற்ற அமெரிக்கத் தலையீட்டை நியாயப்படுத்த முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
ஆப்கானிஸ்தான் மக்கள் "பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழத் தகுதியானவர்கள்" என்றும், பாதுகாப்பு மற்றும் சிவில் ஒழுங்கு உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
தலிபான்களை விட்டு வெளியேற விரும்பும் எவரையும் அனுமதிக்கவும், சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் எல்லைகளைத் திறந்திருக்கவும் உலக நாடுகள் அழைப்பு விடுத்திருக்கின்றன.
"ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் மக்கள்"
தலிபான்கள் காபூல் நகரை முற்றுகையிடத் தொடங்கியதுமே அங்குள்ள மக்களுக்கு அச்சம் ஏற்படத் தொடங்கிவிட்டது. சூறையாடல் மற்றும் கொள்ளையைத் தடுப்பதற்காக நகருக்குள் நுழைவதாக தலிபான்கள் அறிவித்தனர்.
அதற்குள்ளாகவே பல முக்கியப் பகுதிகளை விட்டு அரசுப் படைகள் வெளியேறத் தொடங்கிவிட்டன.
அதன் பிறகு அல் ஜசீரா தொலைக்காட்சியில் அதிபர் மாளிகை தலிபான்களால் முற்றுகையிடப்படும் காட்சிகள் வெளியாகின.
காபூலுக்குள் தலிபான்கள் புகுந்தது முதலே அதிபர் கானி எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் கானி வெளியேறிய பிறகுதான் தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானில் தாஷ்கண்ட் நகருக்குச் சென்றிருக்கலாம் என்று அல்ஜசீரா தொலைக்காட்சி கூறியது.
நாட்டில் ரத்தம் சிந்தப் படுவதைத் தவிர்ப்பவதற்காகவே இந்தக் கடினமான முடிவை எடுத்ததாக தனது பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார்.
"வாள் மற்றும் துப்பாக்கியைக் கொண்டே தாலிபன்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்களின் மரியாதையைக் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.
ஆனால் நாட்டைக் கைவிட்டு அவர் வெளியேறிவிட்டதாக பிற அரசியல்வாதிகள் அஷ்ரப் கானியை விமர்சித்து வருகின்றனர்.
பீதியில் காபூல்
காபூல் நகரை தலிபான்கள் சூழ்ந்து கொண்டதுமே மக்கள் மனதில் பீதி குடியேறியது. தங்களது வாகனங்களையும் உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தனர்.
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடந்ததாக 22 வயதான மாணவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"என் கால்கள் வலிக்கின்றன, அவற்றில் கொப்புளங்கள் உள்ளன, நான் நிற்பதற்குக்கூட முடியாமல் இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.
"நான் கிளம்பும்போது, என் குடும்பத்தைப் பற்றிய நினைவு என்னை வாட்டுகிறது. அவர்களுக்கு தப்பிக்க வழியே இல்லை. எனக்கு எந்த எதிர்காலமும் புலப்படவில்லை" என்றார் அவர்.
அச்சத்தில் மக்கள் பணத்தை எடுக்க முற்பட்டதால் நாள் முழுவதும் வங்கிகளில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டன. ஏடிஎம் மையங்கள் நிரம்பியிருக்கின்றன.
"மக்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, சிலர் தப்பி ஓடுகிறார்கள் அல்லது வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்" என்று உள்ளூர் எம்பியான ஃபர்சானா கோச்சா பிபிசியிடம் தெரிவித்தார்.
காபூல் நகரத்துக்குள் பெரிதாக சண்டை ஏதும் நடக்கவில்லை. பெரும்பாலும் ரத்தக் களரி ஏற்படாமலேயே தாலிபன்கள் நகரத்தின் பெரும்பகுதியைக் கைபற்றிவிட்டனர்.
ஆயினும் கராபாக் மாவட்டத்தில் சண்டை நடந்ததாகவும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாரையும் கொல்ல மாட்டோம், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று பிபிசியிடம் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஷாஹீன் தெரிவித்தார். மக்கள் தங்களது உடைமைகள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா தனது பணியாளர்களையும், தங்களுக்கு உதவியவர்களையும் மீட்பதற்காக துருப்புகளை அனுப்பியிருக்கிறது. தூதரக பணியாளர்களைக் கொண்டு செல்லும் ஹெலிகாப்டர்கள் ஞாயிற்றுக்கிழமை நகரத்தின் வான்பகுதியில் பறந்து சென்றன. மேலும் தூதரகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதால் தூதரக வளாகத்தின் அருகே புகை எழும்பியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் சுமார் 600 பிரிட்டன் ராணுவத்தினர் தங்களது மக்களை மீட்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மற்ற நாடுகளும் தங்கள் நாட்டவர்களை மீட்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. சில நாடுகள் தங்களது தூதரகங்களை மூடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்ட ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
தலிபான்களால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதால், தனது தூதரகத்தை மூடுவதில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது.
No comments:
Post a Comment