இலங்கை நிர்வாக சேவையில் மூன்று தசாப்த காலம் நிறைவு : அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றார் தேசமான்ய யூ.எல்.ஏ. அஸீஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, August 16, 2021

இலங்கை நிர்வாக சேவையில் மூன்று தசாப்த காலம் நிறைவு : அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றார் தேசமான்ய யூ.எல்.ஏ. அஸீஸ்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சட்டமும் ஒழுங்கும், நிதி, போக்குவரத்து, சுற்றுலாத்துறை, கட்டடங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய தேசமான்ய யூ.எல்.ஏ. அஸீஸ் தனது 37 வருட அரச சேவையிலிருந்து 2021.08.11 ஆம் திகதி ஓய்வுபெற்றார். 

2021.05.11 ஆம் திகதி அவர் 60 வயதைப் பூர்த்தி செய்திருந்த போதிலும், அவருக்கு 03 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அட்டாளைச்சேனையில் உதுமாலெவ்வை - ஹதீஜா உம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த அஸீஸ், அட்டாளைச்சேனை அல்-முனீறா வித்தியாலயம், அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) என்பனவற்றில் கல்வி பெற்று பேராதனை பல்கலைக்கழக கலை (சிறப்பு) பட்டதாரியானார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொதுத்துறை நிர்வாகத்திலும் அவர் முதுமாணி பட்டங்களைப் பெற்றுள்ளார்.

சுமார் 06 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய அஸீஸ், 1990 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் நியமனம் பெற்று, 1990 முதல் 1993 ஆம் ஆண்டு வரை புத்தளம் உதவி அரசாங்க அதிபராகவும், 1993 முதல் 2005 வரையான காலப் பகுதியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகவும் பணியாற்றினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் விஷேட ஆணையாளராக சுமார் 08 வருடங்கள் கடமையாற்றிய அஸீஸ், 2005-2009 வரையான காலப் பகுதியில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்று 2009-2012 காலப் பகுதியில் பணியாற்றினார். 

2012 ஆம் ஆண்டு முதல் ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார். 

தனது சேவைக் காலத்தில் புலமைப்பரிசில் பெற்று ஜேர்மனி, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, தென்கொரியா, கம்போடியா, இந்நியா, சிங்கப்பூர், ஹொங்ஹொங் போன்ற நாடுகளுக்கும் அவர் சென்றுள்ளார்.

அரச துறையில் தான் ஆற்றிய பணிகளுக்காக அஸீஸ், பல்வேறு அமைப்புக்களினால் மக்கள் தொண்டன், அகில இலங்கை சமாதான நீதவான், சாமசிறி, தேசமான்ய, சமூகசேவை சிரோண்மணி, தியாக தீபம் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையில் மூன்று தசாப்தங்களை அவர் நிறைவு செய்துள்ளார். சிறந்த தலைமைத்துவம், அறிவுத் திறன், நேர்மை, மனிதாபிமானம், எளிமை போன்ற உயர்பண்புகள் கொண்டவராக அவர் பணியாற்றியுள்ளார்.

சிறு வயது முதல் சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட அஸீஸ், அட்டாளைச்சேனை கல்வி வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பு நல்கியுள்ளார். 

கடந்த 1984 ஆம் ஆண்டு ‘அட்டாளைச்சேனை கல்வி வட்டம்’ சமூகசேவை அமைப்பை ஆரம்பிப்பதிலும், அதனை வெற்றிகரமாக வழிநடத்துவதிலும் அவர் வெற்றி கண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக மாலை நேர வகுப்புகளை கல்வி வட்டம் அமைப்பின் மூலம் இலவசமாக நடத்துவதில் தனது நண்பர்களுடன் இணைந்து தீவிரமாகத் தொழிற்பட்டார். இதனால் ஏழை மாணவர்கள் பெரிதும் நன்மையடைந்தனர்.

அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக் கழகம் ஊடாகவும் அவரது சமூகப் பணிகள் தொடர்ந்தன. தேசமான்ய யூ.எல்.ஏ. அஸீஸ் இலங்கை நிர்வாக சேவையில் 30 வருடங்கள் நிறைவு செய்ததையொட்டிய பாராட்டு விழாக்களை பல அமைப்புகள் நடத்தியிருந்தன.

ஐ.எல்.றிஸான்
(அட்டாளைச்சேனை நிருபர்)

No comments:

Post a Comment