பெண்ணொருவருக்கு நான் ஆடைகளை வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் பதவியை துறப்பேன் : நிரூபிக்கவிட்டால் பெண்களின் பொருட்கள் உள்ளடங்கிய பொதியை தலையில் சுமந்து ஐந்து நிமிடம் நிற்க வேண்டும் - சரத் வீரசேகர - News View

Breaking

Saturday, August 7, 2021

பெண்ணொருவருக்கு நான் ஆடைகளை வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் பதவியை துறப்பேன் : நிரூபிக்கவிட்டால் பெண்களின் பொருட்கள் உள்ளடங்கிய பொதியை தலையில் சுமந்து ஐந்து நிமிடம் நிற்க வேண்டும் - சரத் வீரசேகர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவருக்கு நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத்தயாராக உள்ளேன், ஆனால் என்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாது போனால் பெண்களின் பொருட்கள் உள்ளடங்கிய பொதியை தலையில் சுமந்துகொண்டு சபையில் ஐந்து நிமிடம் நிற்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சனையை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார என்னைப் பற்றி அவதூரான கருத்துக்களை வெளியிட்டார். நான் பெண்ணொருவருக்கு உடைகளை கொண்டு சென்றேன் என்றும், பயணக் கட்டுப்பாடுகளை மீறி கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு இவ்வாறு உடைகளை வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமூகத்தில் சிலர், பிரபலமான பெண்களின் பெயர்களை அடிக்கடி கூறி சுய இன்பத்தை பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு கூறி அவர்கள் ஆத்ம திருப்தியை பெற்றுக் கொள்கின்றனர். இது அவர்களுக்கு உள்ள நோயோ. இது தொடர்பில் அவர்கள் உளவியல் வைத்தியர்களிடம் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் கூறுவது போல் நான் அந்தப் பெண்ணுக்கு உடைகளை கொண்டு செல்லவும் இல்லை. அதற்கு நினைத்ததும் இல்லை. என்னுடன் தொடர்புடையவர்களும் அவ்வாறு செய்யவும் இல்லை. இவ்வாறான பொய்யையே இவர்கள் சமூக மயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த விடயத்தில் நளின் பண்டாரவுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன். அதாவது நான் குறித்த பெண்ணுக்கு ஆடைகளை கொண்டு சென்றேன் என்பதனை நிரூபிக்க முடியுமென்றால் அல்லது என்னுடன் தொடர்புடையவர்கள் அதனை செய்துள்ளதாக நிரூபித்தால் நான் நாளைய தினமே எனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகின்றேன்.

எனக்கு 3 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நான் வாக்கு எண்ணிக்கையில் கொழும்பில் முதலிடத்தையும், இலங்கையில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளேன். இதன்படி அந்த மக்களுக்காக நான் பதவி விலக தயார். இல்லையென்றால் நளின் பண்டார பதவி விலக வேண்டிய அவசியமில்லை. அவர் பெண்களின் பொருட்களை தலையில் சுமந்துகொண்டு பாராளுமன்ற நுழைவாயிலில் 5 நிமிடங்கள் இருக்குமாறு அவருக்கு சவால் விடுகிக்கின்றேன் என்று கூறிக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad