இயற்கையை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - News View

Breaking

Saturday, August 7, 2021

இயற்கையை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்பதுடன், காடழித்தல், மணல் கொள்ளையென இயற்கையை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பதிலளிக்கையில், சுற்றாடலை பாதுகாக்க ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

கடந்த காலத்தில் காடழித்தல் மற்றும் மணல் அகழ்த்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதிருந்தமையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், தற்போது அந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம்.

அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரம் மற்றும் ஏனைய தராதரங்களை பாராது இந்நடவடிக்கைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் அதிகாரம் எமக்கு கிடைக்கப் பெற்றதால் இவ்வாறான அழிவுகளை ஏற்படுத்தியவர்களை சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளோம். பலருக்கு தண்டனைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

மணல் அகழும் செயற்பாடுகளும் மணல் வெட்டும் நடவடிக்கைகளும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதுடன், நாட்டின் இயற்கை மற்றும் இயற்கை வளத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் என்றார்.

No comments:

Post a Comment