(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் கைவிட்டுள்ளது. ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்படாத காரணத்தினால் வர்த்தக சங்கத்தினர் கடைகளை மூடியுள்ளனர். இதற்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இடம் பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இதனால் வர்த்க சங்கத்தினர் மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கடைகளை மூடி சுயமாகவே ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துக் கொண்டார்கள். இச்செயற்பாட்டிற்கு அரசாங்கம் வெட்கமடைய வேண்டும்.
மக்கள் சுயமாக கடைகளை மூடி தங்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அது அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடு என குறிப்பிடுகிறார்கள். அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் நாட்டு மக்கள் இவ்வாறான தீர்மானங்களை ஒருபோதும் எடுக்கமாட்டார்கள்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் கைவிட்டு விட்டது. கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளது. ஆகவே நாட்டை ஒரு வார காலததிற்கேனும் மூடுங்கள் என வைத்தியர்களும், சுகாதார தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். இந்த ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment