பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு பெற்ற காணிக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்க கூட்டமைப்பு தவறிவிட்டது - சுரேன் ராகவன் எம்.பி. - News View

Breaking

Tuesday, August 31, 2021

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு பெற்ற காணிக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்க கூட்டமைப்பு தவறிவிட்டது - சுரேன் ராகவன் எம்.பி.

யாழ்ப்பாண விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டபோது விமான நிலையத்துக்காக பெறப்பட்ட தனியார் காணிகளுக்கான இழப்பீட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் குற்றஞ்சாட்டினார்.

பலாலி விமான நிலையம் என முன்னர் அழைக்கப்பட்ட யாழ்ப்பாண விமான நிலையம் 1950-−1984 வரையான காலப்பகுதியில் விஸ்தரிப்புக்காக இரண்டு கட்டங்களாக தனியாருக்குச் சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்பட்டன.

1950-−1960 காலப் பகுதியில் விமான நிலையத்திற்காக சுமார் 349 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக தெரியவரும் நிலையில் காணிகளை இழந்த சுமார் 716 பேரில் 215 பேருக்கு மட்டு இழப்பீடுகள் கிடைக்கப் பெற்றதாக அறியக் கிடைத்தது.

1984ஆம் ஆண்டு விசேட வர்த்தமானி மூலம் விமான நிலையத்திற்காக இரண்டாம்கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக பொதுமக்களின் சுமார் 64 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. இந்நிலையில் சுமார் 397 பேரின் பெயர்கள் இழப்பீட்டுக்காக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இழப்பீடுகள் வழங்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மாகாண ஆளுநராக நான் பதவி வகித்த போது வலி வடக்கு மீள் குடியேற்றப் பகுதிகளில் முப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் மற்றும் மீள் குடியேற வேண்டியவர்களின் விபரங்கள் தொடர்பில் பதிவுகள் சேகரிக்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆசியுடன் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் விமான நிலையத்தை விஸ்தரிக்க ஆரம்பித்தபோது கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.

நான் ஆளுநராக இருந்தபோது யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றம் சம்பந்தமான கலந்துரையாடலில் விமான நிலையக் காணி இழப்பீடு தொடர்பில் கொழும்புக்கு முழு விவரங்களும் கிடைக்காதது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலக அதிகாரிகளைக் கேட்டிருந்தேன்.

சிலர் கேட்கக் கூடும் நீங்கள் அப்போது ஆளுநராக ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருந்தீர்கள் ஏன் அதனைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என?

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வலி வடக்கில் சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை தனது நேரடி உத்தரவின் மூலம் விடுவித்தார்.

விமான நிலையத்துக்கான சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடரில் நிர்வாக ரீதியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆகவே அக்காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் ஆசியுடன் பொறுப்பேற்ற முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை அதிக பொறுப்புக்களை வைத்திருந்ததன் காரணமாக அதனை நிறைவேற்ற முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் நிருபர்

No comments:

Post a Comment