என்ன நடந்தாலும் நாட்டை மூட மாட்டோம் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லையென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நாட்டில் நிலவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, நாட்டை முடக்குவதா அல்லது, போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பதா என்று ஆலோசித்து வரும் நிலையில், அமைச்சரவை பேச்சாளர் முக்கிய விடயமொன்றை பகிர்ந்துள்ளார்.
நாட்டை முடக்கப்போவதில்லை என்ற பிடிவாதத்தில் அரசாங்கம் இல்லை எனவும், கொவிட் தொற்று மற்றும் மரணங்கள் குறித்த தரவுகளை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை மூடாவிட்டால் பலாத்காரமாக நாட்டை மூடுவதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை தொடர்பாகவும் நாட்டை இன்னும் மூடாமல் இருப்பது பற்றியும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,
உலக நாடுகள் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக மூன்று பிரதான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவற்றில் முதலாவது முழுமையான முடக்கம் ஆகும். சில நாடுகள் மொத்த சனத் தொகையில் 40 - 50 சதவீதம் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியை வழங்கியதன் பின்னர் முடக்கத்தை நீக்குகின்றன.
ஏனைய நாடுகள் குறிப்பிட்ட சனத் தொகைக்கு தடுப்பூசி வழங்குவதோடு, நாட்டில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன. நாம் தற்போது மூன்றாவது முறைமையையே பின்பற்றுகின்றோம்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். என்ன நடந்தாலும் நாம் நாட்டை முடக்கப் போவதில்லை என்ற பிடிவாத்தில் அரசாங்கம் இல்லை. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிந்துரைக்க வேண்டும். நாட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூற முடியாது. ஜனாதிபதியும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார் என்றார்.
அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் 02 மில்லியன் பேர் உள்ளனர். தொழில் எதுவுமற்ற 08 மில்லியன் பேர் உள்ளனர். அரசாங்கம் 08 மில்லியன் மக்கள் குறித்து கவனம் செலுத்தி மூன்றாவது தீர்வை பயன்படுத்துகிறது. மாற்றமான முடிவுக்கு வருவதாக இருந்தால் சுகாதார அமைச்சு இது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென்றார்.
புள்ளிவிபர குறைபாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், புள்ளிவிபரங்களில் ஏற்பட்ட குறைபாடு குறித்து சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சில தவறுகள் நடந்தால் அதனை சரி செய்ய வேண்டும். அரசு மக்களை தவறாக வழிநடத்தாது.மக்கள் உயிர் பாதுகாப்பை எதிர்பார்க்கின்றனர். புள்ளிவிபரங்களை மாற்ற அரசுக்கு தேவையில்லை. உண்மை நிலைமை நாட்டுக்கு அம்பலப்படுத்துவோம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment