நாட்டைத் தொடர்ந்தும் முடக்குவதால் அன்றாட ஊதியம் பெறும் முப்பது இலட்சம் வரையான குடும்பங்கள் கடும் பாதிப்பு : பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசு மக்களுக்கான நலன்புரித் திட்டங்களில் குறைவைக்கவில்லை என்கிறார் சுரேன் ராகவன் - News View

Breaking

Sunday, August 29, 2021

நாட்டைத் தொடர்ந்தும் முடக்குவதால் அன்றாட ஊதியம் பெறும் முப்பது இலட்சம் வரையான குடும்பங்கள் கடும் பாதிப்பு : பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசு மக்களுக்கான நலன்புரித் திட்டங்களில் குறைவைக்கவில்லை என்கிறார் சுரேன் ராகவன்

நாட்டைத் தொடர்ந்தும் முடக்குவதால் அன்றாட ஊதியத்திற்காக வேலை செய்யும் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைவர் என பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் ஆளுநருமான சுரேஷ் ராகவன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் மக்களுக்கான நலன்புரி திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் பணிபுரிகின்றனர். எவ்வாறாயினும் நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையிலும் அவர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் அன்றாட ஊதியம் பெற்று பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் 30 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

நாட்டைத் தொடர்ச்சியாக முடக்குவதால் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டி வரும்.

அந்த வகையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்திற் கொண்டு தொடர்ந்தும் நாட்டை முடக்குவது சிறந்ததல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment