30 வயதுக்கும் மேற்பட்ட 56 சதவீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன : இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி மற்றும் அதனுடன் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துடாவ - News View

Breaking

Sunday, August 29, 2021

30 வயதுக்கும் மேற்பட்ட 56 சதவீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன : இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி மற்றும் அதனுடன் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துடாவ

கொவிட் 19 தொற்றின் பரவலையும் அதன் தாக்கங்களையும் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்குதல் மற்றும் அதனுடன் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துடாவ அளித்த விஷேட பேட்டி.

கேள்வி: இலங்கை உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் கொவிட் 19 தொற்று பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் இத்தொற்று கட்டுப்பாட்டுக்காக இந்நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்து சுருக்கமாகக் குறிப்பிட முடியுமா?

பதில்: ஆம். இத்தொற்று கட்டுப்பாட்டுக்காக இந்நாட்டில் இற்றைவரையும் ஐந்து வகையான தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அங்கீகாரம் அளித்துள்ள இத்தடுப்பூசிகள் அனைத்துக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர பயன்பாட்டுக்கான லைசன்ஸ் (emergency use licences) பெற்றவையாகும். அதாவது அஸ்ட்ரா செனெகா மற்றும் அதன் கொவிஷீல்ட், பைஸர், மொடர்னா, ஸ்புட்னிக் - வி, சைனோபாம்ஆகிய ஐந்து தடுப்பூசிகளுமே அவசரத் தேவையின் நிமித்தம் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

இத்தடுப்பூசிகளில் ஏதாவதொன்றில் இரண்டு சொட்டுகளை குறிக்கப்பட்ட கால இடைவெளிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் கொவிட் 19 தொற்று தாக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

கேள்வி: இற்றை வரையும் இந்நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: இந்நாட்டில் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இவ்வருடம்(2021) ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் 2021.08.25 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிவரையும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் முதல் சொட்டு 1.3 மில்லியனும், இரண்டாவது சொட்டு 08 இலட்சத்து 80 ஆயிரமும், சைனோபாம்தடுப்பூசியின் முதல் சொட்டு 9.6 மில்லியனும் இரண்டாவது சொட்டு 4.5 மில்லியனும், ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதல் சொட்டு ஒரு இலட்சத்து 50 ஆயிரமும் இரண்டாவது சொட்டு 23 ஆயிரமும், பைஸர் தடுப்பூசியின் முதல் சொட்டு 02 இலட்சத்து 54 ஆயிரமும், இரண்டாவது சொட்டு ஒரு இலட்சத்து 04 ஆயிரமும், மொடர்னா தடுப்பூசியின் முதல் சொட்டு 07 இலட்சத்து 71 ஆயிரமும், இரண்டாவது சொட்டு 04 இலட்சத்து 21 ஆயிரமும் என்றபடி வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி இந்நாட்டில் இத்தடுப்பூசி வழங்கவென இலக்காகக் கொள்ளப்பட்டுள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 100 வீதமானோருக்கு முதல் சொட்டு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறு தொகையினரே முதல் சொட்டைப் பெற வேண்டியவர்களாக உள்ளனர். என்றாலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 56 வீதத்தினர் இற்றைவரையும் இரண்டு சொட்டுக்களையும் பெற்றுள்ளனர். ஆகவே இந்நாட்டின் முழு சனத்தொகையில் 56 வீதத்தினர் முதல் சொட்டையும், 26 வீதத்தினர் இரண்டு சொட்டுகளையும் பெற்றுள்ளனர். என்றாலும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலப்பகுதிலும் இத்தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றனவே?

பதில்: கொவிட் 19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இக்காலப்பகுதியிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் நாடெங்கிலும் 430 நிலையங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் ஊடாக தடுப்பூசி வழங்கப்படுகின்றது. இந்நிலையங்கள் இராணுவத்தினராலும் மருத்துவ அதிகாரி அலுவலகங்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இக்காலப்பகுதியில் வயதானவர்களுக்கு தடுப்பூசி வழங்கவென இரண்டு விதமான விஷேட திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று ஒவ்வொரு பிரதேச மருத்துவ அதிகாரி அலுவலகப் பகுதியிலும் தடுப்பூசி வழங்கவென ஒரு விஷேட கிளினிக்காவது வயதானவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. அவை ஒன்றில் வைத்தியசாலையிலோ அல்லது தடுப்பூசி வழங்கும் நிலையத்திலோ அமைந்திருக்கும். அதேநேரம் சில பிரதேசங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்தடுப்பூசியை பெறாதவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சுயமாக செல்ல முடியாதவர்களாக உள்ளனர். இன்னும் சிலர் தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிக்காக நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். மேலும் சிலர் தடுப்பூசி வழங்கும் மையங்களுக்கு சென்றால் இத்தொற்றுக்கு உள்ளாக நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இவ்வாறான பின்புலத்தில் இவ்வாறானவர்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்நடவடிக்கைகளிலும் இராணுவத்தினரும் பிரதேச மருத்துவ அதிகாரிகள் அடங்கலான சுகாதார துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேள்வி: என்றாலும் இத்தடுப்பூசி பெற்ற பின்னர் சிலர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகின்றதே?

பதில்: கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுள்ள மரணங்கள் அனைத்தையும் எடுத்து பகுப்பாய்வு செய்து பார்த்தால் சுமார் 85 வீதமான மரணங்கள் தடுப்பூசி எதனையும் பெற்றிராதவர்களுக்கே ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் இத்தடுப்பூசியின் இரண்டு சொட்டுக்களையும் பெற்றுக்கொண்டவர்களில் சுமார் ஒரு வீதத்தினர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் ஒவ்வொருவரும் புற்றுநோய், நீரிழிவு, சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட ஏதாவதொரு தொற்றா நோய்க்கு பெரும்பாலும் உள்ளானவர்களாக இருந்துள்ளனர். இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களின் நோயெதிர்ப்புச்சக்தி சிறப்பாகச் செயற்படாது. ஏனெனில் அவர்களது உடலில் ஏற்கனவே வேறு நோய்கள் உள்ளன. அதனால் இவ்வாறானவர்களுக்கு இத்தொற்று ஏற்பட்டால் ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். அதனால் நோயெதிர்ப்பு சக்தியினால் இவ்வைரஸை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்படுவதால் மரணம் ஏற்பட்டிருக்கின்றது.

அதேநேரம் வேறு நாடுகளில் இத்தடுப்பூசி வழங்க முன்னர் அன்டிஜன் பரிசோதனை செய்து தொற்று இல்லாத நிலைமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பூசி வழங்கப்படுவதாக சிலர் கூறுவது பொய். உலக சுகாதார ஸ்தாபனமும் அதனை சிபாரிசு செய்யவுமில்லை. அதனால் தடுப்பூசி வழங்க முன்னர் அவ்வாறான பரிசோதனை அவசியமற்றது.

கேள்வி: 5 ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரத்தியேகத் தகவல்களை திரட்ட இத்தடுப்பூசி பயன்படுத்தப்படுவதாகக் கூறி சிலர் தடுப்பூசி பெறாதுள்ளனரே?

பதில்: இத்தடுப்பூசி திரவத்தன்மையிலானது. அது ஊசி ஊடாகவே உடலில் செலுத்தப்படுகின்றது. அதனால் இந்த ஊசி ஊடாக 'சிப்' பை உடலினுள் செலுத்த முடியாது. அதனால் இது முற்றிலும் பொய்யான கதையாகும். இவ்வாறான கதை அமெரிக்காவிலும் கூட பரப்பப்பட்டது. அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி: ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில்?

பதில்: ஒவ்வாமையைப் பொறுத்த வரையில் உணவினால் ஒவ்வாமைக்கு உள்ளாகின்றவர்கள் இத்தடுப்பூசியைப் பெறுவதில் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் எந்த இடத்திலும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வாமைக்காக சிகிச்சை பெறும் நிலைக்கும், வைத்தியசாலைகளில் தங்கிருந்தும் சிகிச்சை பெறும் நிலைக்கும், ஊசி பெற்றுத் தான் ஒவ்வாமை குணமடைந்த நிலைக்கும் உள்ளாகி இருந்தால் அது தீவிரமான நிலையாகும். அவ்வாறானவர்கள் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்தைக் கொண்டிருக்கும் வைத்தியசாலைகளில் தான் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவசர நிலை ஏற்பட்டாலும் கூட அங்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்.

அதேநேரம் சிலருக்கு ஒவ்வாமை எவ்வாறு ஏற்படுகின்றது? அதற்கான காரணம் யாது? என்பன அடையாளம் காணப்படாதிருக்கும். அவ்வாறானவர்கள் ஒவ்வாமைக்கு சிகிச்சை பெறும் மருத்துவ அட்டையை (Clinic card) பிரதேசத்திலுள்ள மருத்துவ அதிகாரி அலுவலக மருத்துவரிடம் காண்பித்து அவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தடுப்பூசி வழங்குவர் அல்லது உரிய இடத்திற்கு தடுப்பூசிக்காக அனுப்பி வைப்பர்.

கேள்வி: எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் பாடசாலை மாணவர்களுக்கு இத் தடுப்பூசியை வழங்கி பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றதே?

பதில்: பாடசாலை மாணவர்களுக்கும் இத்தடுப்பூசியை வழங்க முடியுமென சுகாதார அமைச்சு கொள்கைத் தீர்மானமொன்றை எடுத்துள்ளது. ஆனால் முதற்கட்டாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அடுத்த கட்டமான 18 - முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அதன் பின்னர் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் இத்தடுப்பூசியை வழங்க முடியும். ஆனால் எந்த தடுப்பூசியை எப்போது வழங்குவது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. என்றாலும் 18 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு வழங்குவதாயின் பைஸர் தடுப்பூசியையே வழங்க முடியும். அதுவும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான். 12 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு உலகில் எங்குமே இத்தடுப்பூசி இற்றைவரையும் வழங்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க, செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் தடுப்பூசி பெற்றதற்கான அட்டை இந்நாட்டின் பஸ் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்திலும் ஏனைய இடங்களிலும் கட்டாயப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இதற்கு இத்தடுப்பூசியின் இரண்டாவது சொட்டும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு கட்டாயப்படுத்துவது இத்தடுப்பூசியை மக்கள் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பதாகக்கூட அமைய முடியும்.

கேள்வி: ஆளுக்காள் தொற்றி பரவும் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் குறிப்பிடுவதாயின்?

பதில்: கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி வழங்குதலும் அதன் பரவுதலைத் தவிர்ப்பதற்கான நடத்தையும் ஏக காலத்தில் ஒன்றாக இடம்பெற்றாக வேண்டும். தடுப்பூசியை வழங்குவதன் மூலம் மக்களின் உடல் வைரஸஜுக்கு எதிராகப் போராட பலப்படுத்தப்படுகின்றது. மறுபுறம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட இத்தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக முன்னெடுப்பதன் ஊடாக இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இரண்டு விடயங்களையும் ஏக காலத்தில் செய்தாக வேண்டும். இதை விடுத்து தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுலில் இருக்கும் சூழலில் அருகருகே வீடுகளில் வாழும் அயவர்கள் ஒன்றாக இணைந்து விருந்துபசாரம் நடத்துவதும் ஒன்றாக அமர்ந்து அரட்டையடிப்பதும் எவ்வித பயனையும் அளிக்காது. தற்போதைய சூழலில் ஒவ்வொருவரும் அயலவர் வீட்டில் இருக்க வேண்டும். இத்தொற்று தவிர்ப்புக்கான அடிப்படை சுகாதார பழக்கவழக்கங்களை ஒழுங்குமுறையாவும் தொடராகவும் பின்பற்றவும் தவறக்கூடாது.

கேள்வி: நிறைவாக நாட்டு மக்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகள் யாது?

பதில்: ஒவ்வொருவரது உயிர்வாழ்வும் இன்றியமையாததாகும். குறிப்பாக அவரவர் குடும்பத்திற்கும் மனைவி, பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் மாத்திரமல்லாமல் சமூகத்திற்கும் நாட்டுக்கும் முக்கியமானது.

அத்தோடு ஒவ்வொரு உயிரும் நாட்டுக்கு பெறுமதியானதும் முக்கியமானதுமாகும். அதேநேரம் ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அதனால் இத்தொற்றைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் முன்வருதல் அவசியம். அப்போது தான் பாதுகாப்பு உறுதியாகும். இலங்கை உட்பட முழு உலகிலும் இத்தொற்று கட்டுப்படுத்தப்பட்டால் தான் எல்லாரும் பாதுகாப்பாக வாழலாம். இல்லாவிடில் இத்தொற்றின் அச்சுறுத்தல் நீடித்த வண்ணமே இருக்கும்.

மர்லின் மரிக்கார்

No comments:

Post a Comment