கொரோனா வைரஸின் டெல்டாவுக்குப் பிந்திய பிறழ்வுகளும் இலங்கையில் அடையாளம் : தேவையற்ற பீதியினால் சிகிச்சையை தவிர்ப்பது ஆபத்துக்கே வழிவகுக்கும் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 26, 2021

கொரோனா வைரஸின் டெல்டாவுக்குப் பிந்திய பிறழ்வுகளும் இலங்கையில் அடையாளம் : தேவையற்ற பீதியினால் சிகிச்சையை தவிர்ப்பது ஆபத்துக்கே வழிவகுக்கும்

கொரோனா வைரஸின் டெல்டாவுக்குப் பிந்திய பிறழ்வுகளும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கொழும்பு பிரதேசத்தில் மாத்திரமன்றி, நாட்டின் வேறு பல இடங்களிலும் இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நோயாளர்களின் வருகைக்கேற்ப வைத்திய வசதிகளின் விரிவாக்கம் இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு வைத்தியசாலையும் தங்களிடம் உள்ள நோயாளர் பயன்பாட்டு கட்டில்களில் 50 வீதத்தை கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே அவுஸ்ரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் "வைத்தியசாலைகளினூடாக சிகிச்சையின் மீதான எமது நம்பிக்கைக்கேற்ப மக்கள் பயனடைகின்றனர். எனினும் நோயாளிகளுக்கான பௌதிக மற்றும் மருத்துவ தேவைகளை சமாளிக்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உதவ முன்வர வேணடும்" எனக் கேட்டிருந்தார். இக்கோரிக்கையானது வைத்தியசாலை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு முன்னெடுத்து வரும் அக்கறையைப் புலப்படுத்துகின்றது.

இது மட்டுமல்லாது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் ஹரிச சந்திஸ் சந்திர விடுத்துள்ள விஷேட அறிக்கையில் "கொவிட் தொற்றாளர்கள் அச்சம் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வருவதைத் தவிர்ப்பதாகவும், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறிருந்தால் நிலைமை மோசமடையும் எனவும் வைத்தியசாலை சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" எனவும் (21. 08. 2021) தெரிவித்துள்ளார்.

தேவைப்பாடுகளுக்கு ஏற்ப வசதிகள் போதாமை என்பது நாடு தழுவிய ரீதியில் சவாலாக இருந்து வருகின்ற போதிலும், நோயாளர்களைக் கண்காணிப்பதிலும் அவர்களுக்கான விஷேட வைத்திய வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் வைத்தியசாலைகளும் அவற்றின் கீழ் உள்ள சுகாதாரத் தரப்பினரும் அயராது செயற்பட்டு வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் தொகையும் திருப்தி தருகின்றது. இதுவரை 323,390 பேர் பூரண குணம் பெற்றுள்ளதாக கொவிட் செயலணி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

தொடரான காய்ச்சல், சளி, இருமல், உடல் அரிப்பு அல்லது சொறிவு, மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, இளைப்பு, உடல் சோர்வு, உடல் நோவு, பசியின்மை, உறக்கமின்மை போன்ற அறிகுறிகளில் குறிப்பிட்ட சிலதையாவது கொண்டுள்ள ஒருவர் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்வது அவசியம்.

அறிகுறிகள் தென்பட்டவர்களில் பலர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஆலோசனைகளையும் மருத்துவ உதவிகளையும் பெற்று வருகின்றனர். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு இவ்வாறான அணுகுமுறை பிரயோசனமளிப்பதாக இருந்தாலும், தனியார் மருத்துவர்களில் சிலர் வைத்தியசாலைக்குச் செல்வதற்கான அறிவுரைகளைக் கூறாது நோயாளிகளைத் தாமதமாக்கி வருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

கொவிட் தொற்று எல்லை மீறிய பின்னரே தொற்றாளர்களை வைத்தியசாலைக்குச் செல்லுமாறு குடும்ப மருத்துவர்கள் கூறுவதாக பொதுமக்கள் பலர் தெரிவிக்கின்றனர். இதனால் நோயாளர்கள் பலர் ஆபத்தான கட்டத்துக்குச் சென்று திரும்பியுள்ளதுடன், சில பிரதேசங்களில் மரணங்களும் சம்பவித்துள்ளன. இன்னும் சிலர் வீடுகளில் இருந்து தமக்குத் தெரிந்த அல்லது அறிந்த மருத்துவத்தில் ஈடுபட்டுத் தோல்வியும் அடைந்துள்ளனர். நாம் குணமடைய வேண்டுமாயின் இவ்வாறெல்லாம் காலம் தாழ்த்தாது உடனடியாக வைத்தியசாலைக்கு விரைய வேண்டும்.

வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அன்ரிஜன், பீ.சீ.ஆர் பரிசோதனைகள் கொரானா பரவல் ஏற்பட்டதை உறுதி செய்து வைத்திய செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கான முதலாவது செயற்பாடேயல்லாமல், அது நோயாளியை வதைக்கின்ற விடயமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தேவையற்ற அச்சத்தினால் அப்பரிசோதனையை மேற்கொள்ளாமல் விடலாகாது.

கொரோனாவைப் பொறுத்தவரை சிலர் வைத்தியசாலைக்குச் செல்வதை வெட்கத்துக்குரிய செயலாகக் கருதுகின்றனர். அவர்கள் வைத்தியசாலையை விட்டுத் தூரமாகின்றனர். கொரோனா தொற்றானது வேறு பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகும். அது வேகமாகப் பரவக் கூடியதாகும். தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதென்பதை விட தன்னால் தன் குடும்பமும் அயலவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொதுநல உணர்வு முக்கியமானது. சமூகவியல் நோக்கில் கூறுவதாக இருந்தால், பொறுப்புக் கூற வேண்டிய, பொறுப்புணர்ச்சியுடன் நடக்க வேண்டிய செயற்பாடே சிகிச்சை பெறத் தம்மைத் தயார்படுத்துவதாகும்.

வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை என்பது பொதுப் பிரச்சினையென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர்களைப் பராமரிப்பதில் ஒவ்வொரு வைத்தியசாலை நிருவாகமும் சமூகத் தரப்பினரின் உதவியினைக் கூடப் பெற்று வருகின்றது.

அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கான இட ஒதுக்கீடு, வைத்தியர்களின் தொடரான வருகை, ஏனைய நோயாளிகளின் நோய் நிலைக்கேற்ப உணவுகளை வழங்குதல், ஒட்சிசன் பெறுவதற்கான வசதி, ஆவி பிடிப்பதற்கான ஏற்பாடு, சுடுநீர் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள், தொடரான மருத்துவ ஆலோசனைகளும் மருந்துகளும், உள்நிலைச் சுத்தம் பேணல், மாலை நேரங்களில் விஷேட சிற்றுண்டி போன்ற ஏற்பாடுகள் வைத்தியசாலைகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்படும் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இவ்வாறான திருப்தியான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பலர் தெரிவிக்கின்றனர். தற்போதைய நிலையில் நோயாளிகளின் அதிகரிப்புக்கேற்ப உணவு உள்ளிட்ட நலனோம்பு வசதிகளைப் பேண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. நோயாளிகள் விடயத்தில் பரோபகாரிகள் கரிசனை காட்டுவதாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாறான வைத்தியசாலைகளை நோக்கி பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவணை வரையிலான மூவின மக்களும் வருகை தந்த வண்ணமுள்ளதாக வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே கொவிட் தொற்றாளர்கள் வீடுகளில் முடங்கி தன்னையும் தன்னைச் சூழவுள்ளவர்களையும் சங்கடத்துக்குள்ளாக்குவதிலிருந்து விலகி வைத்தியசாலைகளுக்குச் செல்வது அவசியமாகும்.

ஜெஸ்மி எம்.மூஸா
(பெரியநீலாவணை நிருபர்)

No comments:

Post a Comment