ஒலிம்பிக்கில் தங்கத்தை தன் வசமாக்கிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை - News View

Breaking

Saturday, August 7, 2021

ஒலிம்பிக்கில் தங்கத்தை தன் வசமாக்கிய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா - ஈட்டி எறிதலில் வரலாற்று சாதனை

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.

ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களை பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர்.

அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த அதிகபட்ச தொலைவு 87.58 மீட்டர்.

ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா முதல் மூன்று முயற்சிகளிலுமே தங்கப் பதக்கத்திற்கான நிலையை தக்கவைத்துக் கொண்டார்.

வழக்கமாக 90 மீட்டர் தொலைவைத் தாண்டி எறியும் ஜெர்மனி ஜோகன்னஸ் வெட்டர் தனது முதல் முயற்சியில் 82 மீட்டர் தொலைவு மட்டும் எட்டினார். அடுத்த முயற்சி ஃபவுலாக அமைந்ததால், தொடர்ந்து பின்தங்கினார். மூன்று முயற்சிகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிக்க முடியாததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

அதே நேரத்தில், தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவிற்கு ஈட்டியை எறிந்து தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார் நீரஜ் சோப்ரா. முதல் மூன்று முயற்சிகளிலும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறியும் உத்தியில் எந்தத் தவறும் ஏற்படவில்லை.

முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவின் தொலைவை வேறு எந்த வீரராலும் எட்ட முடியவில்லை. போட்டியாகக் கருதப்பட்ட வெட்டல் வெளியேறிய நிலையில், ஜெர்மனியின் மற்றொரு வீரரான ஜூலியன் வெபர் மற்றும் செக் குடியரசின் விட்டேஸ்லேவ் வெஸ்லி ஆகியோர் மட்டுமே 85 மீட்டர் தொலைவிற்கு அதிகமாக வீசியிருந்தனர்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் மொத்தம் 12 பேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு முதலில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் அதிகபட்சத் தொலைவு கணக்கில் கொள்ளப்படும்.

மூன்று முயற்சிகள் முடிந்த பிறகு முதல் எட்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு மொத்தமாக சிறந்த தொலைவு கணக்கில் கொள்ளப்படும்.

முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவை தவிர வேறு யாரும் 86 மீட்டர் தொலைவைக்கூட எட்டவில்லை.

நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment