இரு வாரங்களுக்கு நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் முழுவதும் சரிவடைந்து விடப் போவதில்லை : 'உலக நாடுகளிடம் அனுபவங்களை பெற்று மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்' : ஜனாதிபதியை வலியுறுத்தும் ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

இரு வாரங்களுக்கு நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் முழுவதும் சரிவடைந்து விடப் போவதில்லை : 'உலக நாடுகளிடம் அனுபவங்களை பெற்று மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்' : ஜனாதிபதியை வலியுறுத்தும் ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

இரண்டு வாரங்கள் நாட்டை முடக்குவதால் பொருளாதாரம் முழுவதும் சரிவடைந்து விடப் போவதில்லை. உலக நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அவதானித்து அதிலிருந்து அனுபவங்களைப் பெற்று மக்களை பாதுகாக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், டொலர் பெறுமதி நாளாந்தம் அதிகரித்துச் செல்கிறது. மத்திய வங்கி டொலரின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா என்றும் விற்பனை பெறுமதி 202 ரூபா என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் சாதாரண மக்களுக்கு 202 ரூபாவிற்கு டொலரைக் கொள்வனவு செய்யக் கூடிய நிலைமை இல்லை. சுதந்திரத்திற்கு பின்னர் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறுகிய காலத்தில் நாம் பாரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நிலைமையை மறைப்பதற்காக வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதால் மக்களே பாதிக்கப்படுவர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் பொருளாதாரம் ஒரே தடவையில் திடீரென வீழ்ச்சியடையாது.

தொடர்ந்தும் அளவுக்கு அதிகமாக நாணயத்தாள்களை அச்சிடுவதால் பண வீக்கம் உயர்வடையும். பண வீக்கம் உயர்வடைந்தால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதனால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர்.

நாணயத் தாள்களை அச்சிடுவதால் பண வீக்கம் ஏற்படாது என்று அரசியல்வாதிகள் கூறினாலும், வட்டி விகிதத்தை அதிகரித்ததன் மூலம் மத்திய வங்கி அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இது போன்ற சிறிய மாற்றங்களால் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

தற்போது நாட்டில் 2.8 பில்லியன் டொலர் இருப்பு மாத்திரமே உள்ளது. தங்கம் உள்ளிட்டவற்றின் பெறுமதியை விலக்கினால் 2.3 பில்லியன் டொலர் மாத்திரமே எஞ்சும். ஆனால் அடுத்த 12 மாதங்களில் அரச, தனியார் துறைகள் 7 பில்லியன் வெளிநாட்டு கடன்களை மீள செலுத்த வேண்டியுள்ளது.

பங்களாதேஷ் 250 மில்லியன் டொலரை வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும் தற்போது ஆரம்ப தொகையாக 50 மில்லியன் டொலரை மாத்திரமே தருவதாகத் தெரிவித்துள்ளது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இதே போன்று சீனா 300 மில்லியன் டொலரை தருவதாகத் தெரிவித்துள்ளது. உண்மையில் இலங்கையை நெருக்கடிகளுக்கு சீனா பாதுகாக்க எண்ணினால் 300 மில்லியன் டொலர்களால் எவ்வாறு அதனை செய்ய முடியும் ?

எனவே மாற்று வழிகுறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும். மாற்று வழிகள் இருக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்களுக்கு 5000 ரூபா வழங்க வேண்டும் என்ற அச்சத்திலேயே நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் பின்வாங்குகிறது. பொருளாதார சந்தையை அரசியல்வாதிகளால் முகாமைத்துவம் செய்ய முடியாது.

எனவே சர்வதே நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்று பிடிவாதமாகவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார நிபுணர்களிடம் இது தொடர்பில் ஆலோசனை பெற வேண்டும். யதார்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment