உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை திசை திருப்பும் முயற்சிலேயே சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களை சந்தித்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோருக்கு தெரியாமல் இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை மறைப்பதற்காக நிகழ்ச்சி நிரலுக்காகவா இவர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களை நாடியுள்ளனர் என்றும் நளின் பண்டார கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் முறைப்பாடளிக்கின்றனர்.
நாமறிந்த சட்டங்களின் படி அவர்களால் அவ்வாறு முறைப்பாடளிக்கவோ, அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவோ முடியாது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சவாலுக்குட்படுத்தியுள்ளதன் மூலம் இவர்கள் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் சவாலுக்குட்படுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பொலிமா அதிபர் அறிவார்களா? இது திட்டமிடலுடன் நடந்த சந்திப்பாகவே இருக்கும் என்று தோன்றுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment