(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஆசிரிய சேவையை கட்டாயச் சேவையாக்கி ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், சமூகத்தில் எமக்கான நன்மதிப்பை ஸ்தாபிப்பதற்கும், எமது சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் விவானி ஹெட்டிகே அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், "கடந்த 27 வருடங்களாக அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பில் பாரிய குளறுபடி நடந்துள்ளது. கடந்த கால சம்பள அதிகரிப்பின்போது அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகளவான சம்பள அதிகரிப்பும், அதிபர் ஆசிரியர்களுக்கு குறைந்தளவான சம்பள அதிகரிப்பையுமே சம்பள நிர்ணய சபை வழங்கியிருந்தது.
இந்த பிரச்சினை காலம் காலமாக இருந்து வந்த பிரச்சினையாகும். எனினும், அதிபர் ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, சமூகத்தில் அவர்களுக்குள்ள நன்மதிப்பை இழக்கச் செய்துள்ளதால் இவர்களின் சம்பளப் பிரச்சினை பூதாகர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
அதிபர் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பை செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நாடு பொருளாதார ரீதியாக நெருக்கடியில் உள்ளதை நாம் அறிவோம். நாம் முட்டாள்கள் அல்லர். எமக்கான சம்பள அதிகரிப்பு பணத்தை பிறகு தாருங்கள். எனினும், அந்த சம்பள அதிகரிப்பை ஓர் வர்த்தமானியொன்றின் ஊடாக உறுதி செய்யும்படி அரசாங்கத்திடம் வேண்டிக் கொள்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment