“வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தயாராக உள்ளது” - ஓய்வு பெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன - News View

Breaking

Tuesday, August 31, 2021

“வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தயாராக உள்ளது” - ஓய்வு பெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பினும் கூட, இவ்விவகாரத்திற்கு இயலுமானளவு விரைந்து தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரச கட்டமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் செயற்திறன் மிக்க கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குத் தயாராக இருப்பதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஓய்வு பெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை இது விடயத்தில் இயலுமான உதவிகளை வழங்குமாறு சிவில் சமூக அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். மேலும் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தீவிர முனைப்புடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் தயாராக இருக்கின்றது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி திங்கட்கிழமையன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் இணையவழிக் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட புதிய நியமனங்களைத் தொடர்ந்து, கடந்த 6 மாத காலப்பகுதியில் அலுவலகத்தின் செயற்பாடுகள் மேலும் முன்னேற்றமடைந்திருக்கின்றன.

இதுவரையான காலப்பகுதியில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அந்த முறைப்பாடுகள் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் ஓய்வு பெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment